மேக்கேதாட்டு அணைக்கு தமிழக அரசு ஒப்புதல்: தலைவர்கள் கண்டனம்

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேக்கேதாட்டு அணைக்கு தமிழக அரசு ஒப்புதல்: தலைவர்கள் கண்டனம்

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன்: தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்குவதில் தடையில்லை என்றால், கர்நாடகம் காவிரியில் புதிய அணை கட்ட எந்த எதிர்ப்பும் இல்லை என தமிழக அரசின் வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இப்படி ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளது தமிழகம் தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம். மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்ட வேண்டும் என்பது கர்நாடகத்தின் நீண்ட நாள் ஆசை. இது தமிழகத்தைப் பலமாக பாதிக்கும் பிரச்னை. இப்படி ஒரு கருத்துக்கு ஒப்புதல் அளிக்கும் முன்பு, சட்டப்பேரவையோ, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையோ, தமிழக அரசு கலந்து பேசியிருக்க வேண்டும். அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்திருப்பது மாபெரும் துரோகம். தஞ்சை சகாரா பாலைவனமாகும். காவிரி டெல்டா பகுதி காய்ந்து போன காடாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன்: காவிரி நதி நீர்ப் பிரச்னை குறித்து உச்சநீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் சார்பில் வாதாடி வரும் வழக்குரைஞர் சேகர் நாப்தே, மேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணைக் கட்டுவதைத் தமிழகம் எதிர்க்கவில்லை என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்தக் கருத்தை திரும்ப பெற வேண்டும். கர்நாடகம் புதிய அணை கட்டுவதை தடைசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதிமுக பொதுச் செயலர் வைகோ: மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகம் தெரிவித்த கருத்தை உச்ச நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சேகர் நாப்தே, தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் கர்நாடகம் புதிய அணை கட்டும் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தலாம் எனக் கூறியிருக்கிறார்.
அவர் இவ்வாறு கூறியதன் பின்னணி என்ன? இதைவிட தமிழ்நாட்டுக்கு மன்னிக்க முடியாத பச்சை துரோகத்தை எவரும் செய்தது இல்லை.
எனவே, எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் பொறுப்பில் நீடிக்கும் தார்மிக தகுதியையும், உரிமையையும் இழந்துவிட்டார். அவர் தனது பதவியை உடனே ராஜிநாமா செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்ட் 21-இல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது மேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு தமிழகம் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் இந்த நடவடிக்கை டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கிவிடும். தமிழக முதல்வர் உடனடியாக தமிழகத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவேண்டும். கர்நாடகம் கட்டவுள்ள அணைகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசுக்கு ஆதரவான கருத்தை உச்சநீதிமன்றமும் தமிழக அரசும் தெரிவித்துள்ளதால் கர்நாடக அரசு தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு ஏற்கெனவே கொடுக்கும் உபரி நீரையும் கொடுக்காமல் இருப்பதற்குத்தான் இது வழிவகை செய்யும். கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்துக்கு முறையாகக் கொடுக்காமல் தவறான தகவல்களை அளித்து, தன்னிச்சையாக முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். மேலும், தமிழகத்துக்கான தண்ணீரைத் திறந்துவிட வலியுறுத்த வேண்டும்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடகம் வழங்குமேயானால் மேக்கேதாட்டுவில் அணை கட்டிக் கொள்ள ஆட்சேபம் இல்லை என்று தமிழக அரசின் வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த அரிய சந்தர்ப்பத்தை கர்நாடக அரசு நழுவவிடுமா? கர்நாடகத்தில் ஆளும் கட்சிகள் மாறலாம். ஆனால், நிலைமை மாறியது இல்லை.
காவிரி பிரச்னையில் அடாவடித்தனமாக நடந்து கொள்வதில்தான் அவர்களுக்குள் போட்டி இருந்துள்ளதே தவிர, தமிழகத்தின் உரிமையை எந்த வகையிலும் அவர்கள் கணக்கில் கொண்டதேயில்லை.
எனவே, அணை கட்டிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது ஆபத்தானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com