மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

கர்நாடக மாநிலம், மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

கர்நாடக மாநிலம், மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்ட தமிழக அரசு அனுமதிக்காது என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

திருவாரூரில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி :
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மீது கர்நாடகம், கேரளா, தமிழகம் ஆகிய 3 மாநிலங்களும் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான உச்சநீதிமன்ற விசாரணையில், ஜூலை 11-ஆம் தேதி முதல் இறுதிவாதம் நடைபெற்று வருகிறது.
கர்நாடகம் மற்றும் கேரள அரசுகளின் இறுதி வாதம் நிறைவடைந்த நிலையில், தற்போது தமிழகத்தின் இறுதி வாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி நடைபெற்ற விவாதத்தின் போது கர்நாடக வழக்குரைஞர் குறுக்கிட்டு, காவிரி நதியில் தமிழகத்தின் பங்கான 192 டி.எம்.சி தண்ணீரை விடுவித்த பின்னர், எஞ்சியுள்ள மிகை நீரை கர்நாடக அரசு பயன்படுத்திக் கொள்ள முடியும். தமிழகத்துக்கு நீர் விடுவிக்க ஏதுவாக மிகை நீரை சேமிக்க கர்நாடக அரசு மேற்கொள்ளும் புதிய அணை கட்டும் பணியை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு தரப்பு வழக்குரைஞரிடம், நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, தமிழகத்தின் நிலப்பரப்பு சமதளமானது என்பதால் புதிய அணைகள் கட்டுவது இயலாது எனவும், மிகை நீரை தற்போதுள்ள அணையிலேயே சேமித்து வைத்து தொடர்புடைய மாநிலங்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் தமிழக அரசு தரப்பு மூத்த வழக்குரைஞர் தெரிவித்தார்.
அப்போது, தமிழகத்துக்கு நீர் தருவதற்கு ஏற்றத்தக்க இடத்தில் ஒரு அணையைக் கட்டி அதை நிர்வகிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடலாமா? என்ற கருத்தை முன்வைத்த நீதியரசர் தீபக் மிஸ்ரா, இது தொடர்பான நிலைப்பாட்டை மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் தெரிவிக்க வேண்டும் என்றார். அப்போது, இதுகுறித்து தனியே வாதிடப்பட வேண்டும் என தமிழக அரசின் மூத்த வழக்குரைஞர் பதிலளித்தார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்ட எந்த எதிர்ப்பும் இல்லை என தமிழக அரசின் மூத்த வழக்குரைஞர் தெரிவித்ததாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவையாகும்.
புதிய அணைகள் கட்டுவது தொடர்பாக மத்திய அரசு, அதன் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கும் போது, தமிழகத்தின் உரிமைகள் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் வலுவான வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும்.
எனவே, தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிராக, கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மேக்கேதாட்டு புதிய அணை விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் தவறானவை என்றார் எடப்பாடி கே. பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com