ரூ. 300 கோடியில் 2,065 ஏரிகள் தூர்வாரப்படும்: முதல்வர் பழனிசாமி

தமிழகம் முழுவதும் ரூ. 300 கோடி செலவில் 2,065 ஏரிகள் விவசாயிகளின் ஆதரவுடன் தூர்வாரப்படவுள்ளன என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
ரூ. 300 கோடியில் 2,065 ஏரிகள் தூர்வாரப்படும்: முதல்வர் பழனிசாமி

தமிழகம் முழுவதும் ரூ. 300 கோடி செலவில் 2,065 ஏரிகள் விவசாயிகளின் ஆதரவுடன் தூர்வாரப்படவுள்ளன என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

திருவாரூரில் சனிக்கிழமை தமிழக சட்டப் பேரவைத் தலைவர் ப. தனபால் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், எம்ஜிஆர் படத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு ரூ.319 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
வேளாண்மை, ஆன்மிகம், தமிழ், கலை ஆகிய நான்கும் கலந்த ஓர் அழகு மாவட்டமாக திருவாரூர் திகழ்கிறது. உழவர்களும், உழைப்பாளர்களும் நிறைந்த ஒரு விவசாய மாவட்டமாக விளங்கும் திருவாரூரின் நெல் உற்பத்தி அளவு 8,52,925 டன். இது மாநில உற்பத்தியில் 10.7 சதவிகிதமாகும்.
"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி' என்று விவசாயிகளை கடவுளின் குழந்தைகளாக மதித்தவர் எம்ஜிஆர். உழைக்கும் மக்களுக்கு ஒரு துன்பம் என்றால் முதலில் உதவிக்கரம் நீட்டுபவராக அவர் விளங்கினார். அந்த குணம்தான் அவரை தமிழகத்தின் முதல்வராக ஆக்கியது. அவரைப்பற்றி அதிகமாக தெரிந்து வைத்திருந்ததால்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தான் முதல்வரான பிறகு காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை வழங்கினார்.
காவிரி நதிநீர் பிரச்னைக்காக நீதிமன்றங்களில் வாதிட்டு, வெற்றியும் பெற்றார். ஜெயலலிதாவின் தொடர் முயற்சியால் 19.2.2013 அன்று மத்திய அரசிதழில் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை வெளியிடப்பட்டது. ஜெயலலிதா டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை அதிகம் விரும்பினார். அவரின் வழியில்தான் தமிழகத்தில் தற்போது ஆட்சி நடைபெற்று வருகிறது.
அவரின் எண்ணப்படியே இந்த அரசு பதவியேற்ற குறைந்த காலத்திலேயே பல திட்டங்களைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளது. மகசூல் பாதித்த 1,33,361 விவசாயிகளுக்கு ரூ.161.22 கோடி வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நிகழாண்டில் ரூ. 56.92 கோடி செலவில் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் எண்ணங்களை, உழைப்பை உயர்த்தும் வகையில் தற்போதைய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 1,519 ஏரிகள் தூர்வாரப்பட்டு அதிலிருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுத்து தங்களது வயல்களில் போட்டு பயன்பெற்றுள்ளனர். இத்திட்டம் சிறப்பாக உள்ளது என்று விவசாயிகள் கருத்து கூறியதால் ரூ. 300 கோடி செலவில் தமிழகம் முழுவதும் 2,065 ஏரிகள் தூர்வாரப்படவுள்ளன.
விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களை சேமித்து வைக்கும் வகையில் 7,879 கிடங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதேபோல் ரூ. 7,000 கோடி விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழகம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. இதனால்தான் 4 முறை மத்திய அரசின் விருதை தமிழகம் பெற்றுள்ளது.
கல்வியில் புரட்சி: விவசாயத்தைப் போல் தமிழகம் கல்வியிலும் புரட்சி செய்து வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலியாக இருந்த 20,000 ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பியதால் மாணவர்கள் கல்வி அறிவு பெற்று புரட்சி ஏற்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் தமிழகம் கல்வியில் 24.9 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. உயர் கல்வி படிப்பவர்களின் சதவீதம் 44.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் தமிழகத்தில் 65 அரசுக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசு 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் திறந்துள்ளது.
விவசாயிகளின் அரசு: பிரதமர் நரேந்திரமோடியை அடிக்கடி சந்திப்பதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர். அப்படி அவரை சந்தித்ததால்தான், பிரதமர் ராமேசுவரம் வந்தபோது தமிழகத்துக்கு எத்தனை லட்சம் வீடுகள் வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறினார்.
இந்த அரசு பல்வேறு திட்டங்களை கொடுத்து சாதனை படைத்து வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியாக அளித்த திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. ஆனால் அதிமுக அரசு மீது தொடர்ந்து தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர்.
140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தமிழகத்தில் ஏற்பட்டுள்ளதால், டெல்டா விவசாயத்துக்கு தண்ணீர் பெற்று கொடுக்க முடியாமல் போனது. இருப்பினும் விலைவாசி உயராமல் இருப்பதற்கு தமிழக அரசின் சிறப்பான கண்காணிப்பு மற்றும் செயல்பாடுகளே காரணம். மனுநீதிச் சோழன் நினைவாக திருவாரூரில் புதிதாக மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் எண்ணப்படியே நாங்களும் இந்த மாவட்டத்திற்கு வேண்டிய அத்தனை திட்டங்களையும் விரைந்து செயல்படுத்துவோம் என்றார் முதல்வர்.
விழாவில் மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள் ஆர். காமராஜ், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், பி. தங்கமணி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே. கோபால், கு. பரசுராமன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் இரா. வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் நன்றி கூறினார்.


முதல்வர் சொன்ன குட்டிக் கதை

விழாவில் முதல்வர் கூறிய குட்டிக்கதை: முனிவர் ஒருவர் காட்டில் வசித்து வந்தார். அவருடன் பாசத்துடன் வெளிஉலகம் தெரியாத பூனை ஒன்று இருந்தது. ஒரு நாள் முதன்முறையாக நாய் ஒன்றை கண்ட அந்த பூனை பயந்து முனிவரிடம் ஓடி வந்து, அவரது தவ வலிமையால் தன்னை நாயாக மாற்றிவிடும்படி கேட்டது. அவ்வாறு அதை முனிவர் மாற்றினார். நாயாக மாறிய பூனை, சில நாள் கழித்து ஒரு புலியை பார்த்து பயந்து ஓடிவந்தது. அது கேட்டுக்கொண்டதை அடுத்து அதை புலியாக மாற்றினார். புலியாக சுற்றி வந்த பூனை ஒரு நாள் சிங்கத்தை பார்த்து பயந்து ஓடி வந்து தன்னை சிங்கமாக மாற்றுமாறு கூறவே முனிவரும் அவ்வாறே செய்தார். சிங்கமாக மாறிய பூனை, இனி காட்டுக்கு நானே ராஜா என்று கர்வத்துடன் உலாவியது.
அப்போது காட்டில் 8 கால்களை உடைய விசித்திரமான சரபம் என்ற பெரிய மிருகத்திற்கு அனைத்து மிருகங்களும் பயந்து நடுங்குவதைக் கண்ட சிங்க உருவத்தில் இருந்த பூனை மீண்டும் முனிவரிடம் ஓடியது. குருவே எனது கடைசி ஆசை. அந்த சரபம் மிருகமாக என்னை மாற்றுங்கள். நான் இந்தக் காட்டுக்கே பாதுகாப்பாக இருப்பேன் என்றது. முனிவரும் சரபம் மிருகமாக அதை மாற்றினார்.
திடீரென்று ஒருநாள் அதற்கு யோசனை ஒன்று தோன்றியது. முனிவர் தன்னைப் போல வேறு ஏதாவது மிருகத்தை சரபம் மிருகமாக மாற்றி விட்டால் தனக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். தனக்குப் போட்டியாக யாரும் வராமல் இருக்க வேண்டுமென்றால் முனிவரைத் தீர்த்துக் கட்டுவதுதான் சிறந்த வழி என்று தீர்மானித்து, முனிவரைக் கொல்வதற்கு சென்றது.
பூனையின் கெட்ட எண்ணத்தை அறிந்த முனிவர், பூனையிடம், உருவத்தில் நான் உன்னை எப்படி மாற்றினாலும் இன்னும் நீ பூனையாகவே இருக்கிறாய் என்று கூறி பழையபடி பூனையாகவே மாற்றினார். பூனையும் வாலை சுருட்டிக் கொண்டு அவரது ஆசிரமத்தில் ஒரு மூலையில் படுத்துக் கொண்டது.
இந்த கதையில் வரும் முனிவர் அதிமுக. பூனை யாராக இருக்கும் என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன். தன்னை வளர்த்து ஆளாக்கிய கழகத்திற்கு களங்கம் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும், இந்த பூனையின் கதிதான் ஏற்படும். இதை கட்சியினர் மனதில் நிறுத்தி, ஒற்றுமையுடன் செயலாற்றி, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் எண்ணங்களை நிறைவேற்ற உறுதி ஏற்கவேண்டும் என்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com