8 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள விமான ஓடுபாதைப் பணிகள்

தொழில்துறை, வேலைவாய்ப்புகள் பெருகவும், பொருளாதார வளர்ச்சியடைவும், அன்னியச்செலாவணி வரத்து அதிகரிக்கவும் 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திருச்சி விமான நிலைய நீட்டிப்பு
8 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள விமான ஓடுபாதைப் பணிகள்

தொழில்துறை, வேலைவாய்ப்புகள் பெருகவும், பொருளாதார வளர்ச்சியடைவும், அன்னியச்செலாவணி வரத்து அதிகரிக்கவும் 8 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திருச்சி விமான நிலைய நீட்டிப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையம் மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளதைப் போலவே, நாட்டிலேயே ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு வெகு அருகாமையில் ( (3.கி.மீ) அமைந்துள்ள ஒரே விமான நிலையமும் திருச்சிதான். உலகின் எந்தப் பகுதிக்கும் திருச்சியிலிருந்து எளிதாக சென்று வர முடியும். அந்த அளவுக்கு உலக வரைபடத்தில் திருச்சி விமான நிலையம் மிக முக்கிய நிலையமாக அமைந்துள்ளது.
திருச்சியில் தற்போது செயல்பட்டு வரும் விமான நிலைய முனையக் கட்டடம் கடந்த 2009-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. பயணிகளின் வருகை மேம்பட்டதை அடுத்து 2012-இல் திருச்சி விமான நிலையம் சர்வதேச அந்தஸ்தை பெற்றது. 2011-ஆம் ஆண்டு முதல் சரக்குப் போக்குவரத்தும் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இங்கிருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபை, ஷார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடிப் போக்குவரத்தும், பல்வேறு நாடுகளுக்கு குறிப்பிட்ட இந்த நாடுகள் வழியாக மாற்று விமானங்கள் மூலமும் போக்குவரத்து நடைபெற்று வருகின்றன.
அதேபோல பிரத்யேக விமானங்கள் இல்லாவிட்டாலும், பயணிகள் விமானம் மூலம் சரக்குப் போக்குவரத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினசரி சுமார் 10 முதல் 15 மெட்ரிக் டன்கள் உணவுப்பொருள்கள், காய்கனிகள், மலர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் ஏற்றுமதியாகின்றன.
உலகின் பல்வேறு பகுதியில் உள்ள விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை திருச்சிக்கு இயக்க முன்வந்துள்ள நிலையில், அனுமதி கிடைத்தும் ஓடுதளம் நீளம் பற்றாக்குறையால் விமானங்களை இயக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளன. மேலும் பல தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலைகளை அமைக்க சாத்தியக்கூறுகள் இருந்தும் தொழில்களை தொடங்க முடியவில்லை. விமான நிலையத்துக்கு அருகில் தொடங்கப்பட்ட அரசு தொழில்நுட்பப் பூங்காவும் போதிய வளர்ச்சியின்றி இருக்க விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படாதது மிக முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. ஓடுதள நீட்டிப்புடன் அதிகளவில் பயணிகளை கையாளும் வகையில் புதிய முனையக் கட்டடம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விமான நிலைய விரிவாக்கம் மற்றும் ஓடுதள நீட்டிப்புப் பணிகளுக்கு விமான நிலைய ஆணையக் குழுமத்திடம் உள்ள நிலம் போக கூடுதலாக 683.30 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம் தேவைப்படுகின்றது. இதில் ராணுவத்துக்கு சொந்தமான நிலம் 337.70 ஏக்கரும், மாநில அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்கள், தனியாருக்குச் சொந்தமான விளைநிலம் மற்றும் தரிசு நிலங்கள், குடியிருப்புகள் என மொத்தம் 345.62 ஏக்கர் நிலமும் அடங்கும். இந்த நிலங்களில் ராணுவ நிலம் தொடர்பாக பேச்சு முடிந்து அவற்றை கையகப்படுத்தும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. இதர 345.30 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதில் கடந்த 8 ஆண்டுகளாக சுணக்கம் நிலவி வருகின்றது.
இதற்கு அரசியல் கட்சிகள் பெரிதும் துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் 8 ஆண்டு கிடப்புக்குப் பின்னர் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி 345 ஏக்கர் நிலத்தையும் கையகப்படுத்த அனுமதியளித்தார். அதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் பணிகள் முடுக்கி விடப்பட்டு வருகின்றன. நீண்ட கால தாமத்துக்குப் பின்னர் பணிகள் தொடங்கினாலும், மேம்பாட்டுப் பணிகள் என்பதால் வணிகர்கள், பயணிகள் மற்றும் நுகர்வோர் சங்கங்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில அரசியல் கட்சியினர் திட்டமிட்டு விமான நிலைய மேம்பாட்டுப் பணிகளை தடுத்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் விமான நிலைய மேம்பாட்டுப் பணிகளை தடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. அரசியல் கட்சியினரும், விவசாயச் சங்கத்தினரும் அவ்வப்போது மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு விவசாயிகளின் நிலங்களை நிலம் கையகப்படுத்தக்கூடாது எனக்கூறி மனுக்கொடுப்பது வாடிக்கையாகிவிட்டது. இதுபோலவே ஏற்கெனவே திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பல முக்கிய வளர்ச்சித்திட்டங்ளுக்கும் முட்டுக்கட்டை போடுவது வழக்கமாகி விட்டது. அவ்வாறு தடுக்கப்பட்ட திட்டங்கள் பெரும்பாலும் ஒருவழியாக நிறைவேற்றப்பட்டுவிட்டன.
அதில் விமான நிலைய ஓடுதள நீட்டிப்புப் பணியுடன் திருச்சியை சுற்றி அமைக்கப்படும் வட்டச்சாலை மற்றும் துவாக்குடி இணைப்புச்சாலை பணிகள் மட்டுமே கிடப்பில் உள்ளன. இதில் இணைப்புச்சாலை மற்றும் சுற்றுச்சாலைகளை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது விமான நிலை ஓடுதள நீட்டிப்புபணி. இது விமான நிலைய வளர்ச்சிக்கு மட்டுமின்றி மேலும் பல்வேறு தொழில்கள் வளர நேரடியாகவும் மறைமுகமாவும் வழிவகுக்கின்றன. குறிப்பாக அன்னியச்செலாவணி வருவாயை ஈட்டித்தருவதில் விமான நிலைய வளர்ச்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. விமான நிலைய வளர்ச்சிக்கு ஓடுதளம் நீட்டிப்பு அத்தியாவசியமாகும்.
இது குறித்து திருச்சியில் செயல்பட்டு வரும் சேவை மற்றும் நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எம். சேகரன் கூறுகையில், விமான நிலைய மேம்பாடு என்பது விமான நிலையத்தை மட்டும் சேர்ந்ததல்ல, மாவட்டம் மட்டுமின்றி திருச்சி மண்டலத்தின் வளர்ச்சியிலும் அதற்கு பங்கு உண்டு. விமான நிலைய ஓடுதளம் நீட்டிக்கப்பட்டால் சரக்குப் போக்குவரத்துக்கென பிரத்யேக விமானங்கள் இயக்கப்படும். பல்வேறு வெளிநாட்டு புதிய விமானப் போக்குவரத்துகளும் தொடங்கப்படும். இதனால் வெளிநாட்டுப் பயணிகள் வருகை அதிகரிப்பதுடன் அன்னியச்செலாவணியின் வரவு அதிகரிக்கும். பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்குப்போக்குவரத்து, ஓட்டல் தொழில், சுற்றுலாத் தொழில், வாடகை கார்கள், பேருந்துகள் போக்குவரத்து, உள்ளிட்ட தொழில்கள் வளர்ச்சி பெறும். இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர். எனவே தேவையில்லா காரணங்களை கூறி விமான நிலைய ஓடுதளம் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை தடுப்பது முறையல்ல.
திருச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிலம் கொடுப்பதில் மட்டுமே தடை நிலவுவது வாடிக்கையாகிவிட்டது. முன்பு விலை கட்டுப்படியாகாது என்றனர். இப்போது அரசு நல்ல விலை தருவதுடன் மாற்று வசதியும் செய்து தருகின்றது. இருப்பினும் நிலம் தருவதில் பல்வேறு தடைகள் நிலவுகின்றன. ஆனால், இதர ரியல் எஸ்டேட் பணிகளுக்கு மட்டும் விவசாய நிலம் என்றும் பாராமல் விற்பனை செய்யும் விவசாயிகள் வளர்ச்சித் திட்டத்துக்கு நிலம் கொடுக்கும்போது மட்டும் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றார்.
- ஆர்.எஸ்.கார்த்திகேயன்


1. திருச்சி விமான நிலைய ஓடுதளம் 8, 136 அடியாக உள்ளது. இதனை சுமார் 12,500 அடியாக நீட்டித்தால்தான் பெரிய ரக விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் வந்து செல்ல முடியும். அவ்வாறு பெரிய மற்றும் சரக்கு விமானங்கள் வந்து சென்றால்தான் விமான நிலையம் மட்டுமின்றி அதனைச் சார்ந்த பல்வேறு தொழில்களும் வளரும், வருவாய், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.
2. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தலையீடு காரணமாக திருச்சியில் அமைய வேண்டிய சுற்றுச்சாலைப் பணிகளும், அரியமங்கலம் முதல் துவாக்குடி வரையிலுள்ள இணைப்புச்சாலைப் பணிகளும் முடங்கிவிட்டன. அடுத்ததாக விமான நிலைய விரிவாக்கப் பணிகளையும் முடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சி மண்டலத்தின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப்படும்.
3. திருச்சி, தஞ்சை, புதுகை, திருவாரூர், நாகை, கரூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகளும், வணிகர்களும் திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாவட்டங்களில் வணிகம் மற்றும் தொழில்கள் வளர்ச்சிக்கு திருச்சி விமான நிலைய விரிவாக்கம் அவசியமாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com