சசிகலா தான் அதிமுக பொதுச்செயலாளர், நாளை ஆளுநரை சந்திக்கிறோம்: டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்கள் சுளீர்

டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏ-க்களும் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் திங்கட்கிழமை இரவு மரியாதை செலுத்தினர்.
சசிகலா தான் அதிமுக பொதுச்செயலாளர், நாளை ஆளுநரை சந்திக்கிறோம்: டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்கள் சுளீர்

அதிமுக-வின் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் இரு அணிகளும் திங்கட்கிழமை இணைந்தன. இதையடுத்து தமிழக அமைச்சரவைப் பட்டியல் மாற்றியமைக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சராக பதவியேற்றார்.

மேலும், அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளராகவும் ஓபிஎஸ் நியமிக்கப்பட்டார். எடப்பாடி கே.பழனிசாமி தமிழக முதல்வராகவும், அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்.

அதுமட்டுமல்லாமல் சசிகலா குடும்பம் அதிமுக-வில் இருந்து முழுமையாக நீக்கப்படும் என இருவர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏ-க்களும் மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் திங்கட்கிழமை இரவு மரியாதை செலுத்தினர்.

பழனியப்பன், செந்தில்பாலாஜி, முத்தையா, கோதண்டபாணி, ரெங்கசாமி, வெற்றிவேல், தங்கத்தமிழ்ச்செல்வன், முருகன், மாரியப்பன் கென்னடி, தங்கதுரை, பாலசுப்ரமணியன், ஜெயந்தி, பார்த்திபன், சுப்பிரமணியன், ஜக்கையன், சுந்தர்ராஜ், கதிர்காமு, ஏழுமலை உள்ளிட்ட 18 பேர் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் தரப்பில் கூறியதாவது:

ஜெயலலிதாவின் ஆட்சியைக் காப்பாற்ற அன்றைய தினம் சசிகலா அவர்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். அவர்களின் ஆணைப்படிதான் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கூட ஓட்டு போடாமல் நம்பிக்கை துரோகம் செய்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம். நாங்கள் அனைவரும் நாளை காலை 10 மணியளவில் ஆளுநரை சந்திக்கப் போகிறோம்.

அதற்கு முன்பே சந்திப்பின் காரணத்தை உங்களிடத்தில் தெரிவிப்பது மரியாதை அற்ற செயலாகும். அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது.

தற்போது வரை எங்கள் பக்கம் 25 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். மேலும், பலர் எங்கள் அணியில் இணைய காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் நாங்கள் எங்கள் கஷ்டங்களை தெரிவித்தோம். அதிமுக-வை வழிநடத்த சசிகலாவைத் தவிர வேறு யாருக்கும் யோக்கிதை இல்லை என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com