அணிகள் இணைவதற்கு சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது: ஓ. பன்னீர்செல்வம்

அதிமுகவின் 2 அணிகளும் இணைவதற்கு சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதனால் அதிமுக இரு அணிகளும் ஓரிரு நாள்களில்
அணிகள் இணைவதற்கு சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது: ஓ. பன்னீர்செல்வம்

அதிமுகவின் 2 அணிகளும் இணைவதற்கு சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதனால் அதிமுக இரு அணிகளும் ஓரிரு நாள்களில் இணைவது உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திங்கள்கிழமையன்று (ஆக. 21) இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுக}வில் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு விரிசல் ஏற்பட்டு இரு அணிகளாக கட்சி பிளவுபட்டது. இந்த இரண்டு அணிகளையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை திரை மறைவில் நடைபெற்றது.
ஆனால், அதில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாமல், இழுபறியாகவே இருந்து வந்தது. இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், அதிமுக இரு அணிகளும் இணைவதற்கான சூழ்நிலை சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்டது.
இதற்காக கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஆக.18) முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்களும், ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் அவரது ஆதரவாளர்களும் இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தினர்.
இவ்வாறு இரு அணிகளும் ஆலோசனை நடத்திய நேரத்தில், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. இதனால், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அங்கு வந்து இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது, ஜெயலலிதா நினைவிடத்தில், அதிமுக எம்.எல்.ஏ.க்களும், தொண்டர்களும் அதிக அளவில் குவிந்திருந்தனர். கொட்டும் மழையில் குவிந்த அவர்களை ஒழுங்குபடுத்த, போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து மணிக்கணக்காக நீண்டு கொண்டே சென்றதே தவிர எந்த முடிவும் எட்டப்படவில்லை. இருப்பினும், அணிகள் இணைப்பு விரைவில் நடைபெறும் என இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு வந்தது.
சுமுக முடிவு எட்டப்பட்டிருக்கிறது: இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் நெல் கட்டும் செவல் கிராமத்தில் ஒண்டிவீரன் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராஜபாûளையத்துக்கு சனிக்கிழமை இரவு வந்தார். அங்கு தங்கிய அவர் ஞாயிற்றுக்கிழமை காலை நெல்கட்டும்செவல் புறப்பட்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:
அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் இணைவதற்கான சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது. விரைவில் முறைப்படி அறிவிப்போம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு இல்லமாக மாற்ற முடியாது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுவதை ஏற்க முடியாது. அவர் ஒன்றும் சட்ட நிபுணர் அல்ல என்றார். இந்தப் பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கே.பி முனுசாமி, மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், நாமக்கல் எம்.பி சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

ஓரிரு நாள்களில் முடிவு

வேலூர் கோட்டை மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்து ஓரிரு நாள்களில் நல்ல முடிவு வெளியிடப்படும் என்றார்.
அமைச்சர் செங்கோட்டையனும் இரு அணிகளின் இணைப்பு ஓரிரு நாட்களில் நடைபெறும் என்று கூறியுள்ளார். ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மக்களும், அதிமுகவினரும் எதிர்பார்க்கக் கூடிய நல்ல முடிவு எட்டப்படும் என்றார்.
அதுபோல, சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிதியமைச்சர் ஜெயக்குமார், எது நடக்க இருக்கிறதோ..... அது நாளை நன்றாக நடக்கும் எனத் தெரிவித்தார்.

தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம்

இவ்வாறு இரு அணிகளும் ஓரிரு நாள்களில் இணையலாம் என்ற தகவல்கள் வெளியான அதே நேரத்தில், அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் திங்கள்கிழமை (ஆக.21) நடைபெறலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
அந்தக் கூட்டத்தில் கட்சியின் சட்டதிட்ட விதிகளில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படுவது தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்தல் ஆணையம் கட்சியின் பெயர், சின்னம் முடக்கி வைத்ததை விலக்கிக் கொள்ள நடைமுறைகளை மேற்கொள்ள காலஅவகாசம் பிடிக்கும். எனவே அதுவரை கட்சியை நடத்த வழிகாட்டும் குழு அமைத்து செயல்படுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com