ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகிறார்?: 12 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகிறது

அணிகள் இணைப்பு குறித்து இன்று நண்பகல் 12 மணிக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது. அணிகள் இணைப்பு குறித்து முதல்வர் எடப்பாடி
ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகிறார்?: 12 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகிறது

சென்னை:  அணிகள் இணைப்பு குறித்து இன்று நண்பகல் 12 மணிக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது.

அணிகள் இணைப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அறிவிப்பு வெளிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இணைப்புக்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று நண்பகல் 12 மணிக்கு பன்னீர்செல்வம் வருகிறார். அவரை அமைச்சர்கள் அழைத்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேராக தலைமை அலுவலகம் வந்துவிடுகிறார். இதையடுத்து அணிகள் இணைப்பு குறித்து அறிவிப்புகள் வெளியிடுகிறார்கள். பின்னர் கட்சி குறித்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.  
இணைப்பு அறிவிப்பு மற்றும் முக்கிய ஆலோசனைகளுக்கு பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்கின்றனர். அங்கு அவருக்கு மரியாதை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முக்கிய ஆலோசனைகளில் ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் பதவி, அவரது ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி மற்றும் கட்சியில் முக்கிய பொறுப்பு உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

முதல்வர் பதவியிருந்து விலகி ஓ.பன்னீர்செல்வம், கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் மேற்கொண்டு பிரிவதற்கான காரணத்தை அதிரடியாக வெளியிட்டார். அதன்பிறகு அதிமுகவில் கூவாத்தூர் சம்பவம் உள்ளிட்ட பல அதிரடி சம்பவங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.

இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியையும் இணைப்பதற்கான ரகசிய பேச்சுவார்த்தை பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்தது.

இணைவதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 2 முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதாவது, சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்க வேண்டும் என்றும், ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. தற்போது, இந்த 2 நிபந்தனைகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இரு அணிகளும் இணையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பே அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சி மற்றும் ஆட்சியில் உள்ள பதவிகளை பிரிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டதால் இணைவதில் சிக்கல் நீடித்தது. இரவு வரை ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல் முறையாக அதிமுக அணிகள் இணைப்பு பற்றி ஓரிரு நாளில் நல்ல முடிவு ஏற்படும் என்று தெரிவித்தார்.

திருவாரூரில் பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. பேச்சுவார்த்தைகள் மூலம் அவை சரி செய்யப்பட்டுள்ளன. விரைவில் இரு அணிகளும் இணையும் என்று தெரிவித்தார்.

அதிமுக இரு அணிகளும் இணையும் பட்சத்தில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி மற்றும் நிதித்துறை அமைச்சராகவும் அவர் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும், அவரது அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜனுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொறுப்பும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை வகிக்கும் கே.ஏ.செங்கோட்டையனுக்கு பொதுப்பணித்துறையும் வழங்கப்படும் என்று தெரிகிறது. தற்போது, பொதுப்பணித்துறை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட புதிய அமைச்சர்கள் வரும் புதன்கிழமை பதவி ஏற்றுக்கொள்வார்கள் என தெரிகிறது.

இந்நிலையில், மும்பையில் இருந்து அவசரமாக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் சென்னை வருகிறார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com