சென்னை மாநகரத்திற்குள் இப்படியும் ஒரு கிராமம்: 7,500 பேர் வாக்களித்த கிராம நிர்வாகிகள் தேர்தல்

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம நிர்வாகிகள் தேர்தலில் சுமார் 7,500 வாக்காளர்கள் பங்கேற்று வாக்களித்தனர்.
சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கும் பெண்.
சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கும் பெண்.

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம நிர்வாகிகள் தேர்தலில் சுமார் 7,500 வாக்காளர்கள் பங்கேற்று வாக்களித்தனர். இதன் மூலம், பெருநகர மாநகராட்சி அந்தஸ்து பெற்ற சென்னை மாநகரில் ஒரு கிராமம் ஒன்றில் தொடர்ச்சியாக சுமார் 43 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக முறைப்படி தொடர்ந்து தேர்தல் நடைபெறுவது இங்கு மட்டும்தான் என இக்கிராமத்தைச் சேர்ந்தோர் பெருமிதம் கொள்கின்றனர்.
கிராமத்தின் பின்னணி: 1962-ஆம் ஆண்டில் இன்றைய மியான்மரான அன்றைய பர்மாவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தையடுத்து தாயகம் திரும்பிய தமிழர்கள் சென்னையில் வியாசர்பாடி, எண்ணூர், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
பின்னர் 1966-ஆம் ஆண்டுவாக்கில் எண்ணூர் பகுதியில் ஆங்காங்கு வசித்து வந்த பர்மா தமிழர்கள் தற்போதைய சிவகாமி நகர் அமைந்துள்ள காலி இடத்தைச் தேர்வு செய்தனர். அப்போது, முதல்வர் பக்தவச்சலம் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற நிலையில் காமராஜரின் தாயாரை நினைவுகூரும் வகையில் அன்னை சிவகாமி நகர் என பெயர் சூட்டினர். இதேபோல் வியாசர்பாடி ஏரியில் அமைக்கப்பட்ட பர்மா தமிழர் குடியிருப்புக்கு பக்தவச்சலம் காலனி என பெயர்சூட்டப்பட்டினர்.
அன்னை சிவகாமி நகர் அமைந்துள்ள இடம் ரயில்வே துறைக்குச் சொந்தமானது என்பதால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. சுமார் 500 மீட்டர் நீளமுடைய 11 தெருக்கள் அடங்கிய இந்த நகரில் தற்போது சுமார் 14 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு வசிப்போரில் பெரும்பான்மையானவர்கள் பழைய ராமநாதபுரம், தஞ்சை பகுதியை பூர்வீகமாகக் கொண்டவர்கள்தான். இக்கிராமத்தில் இதுவரை பெரிய அளவிலான ஜாதி அடிப்படையிலான மோதல்கள், பிரச்னைகள் ஏதும் நடைபெற்றதில்லை . போலீஸாரைப் பொருத்தவரை இப்பகுதி தொடர் கண்காணிப்புக்கு உட்பட்ட பதற்றம் நிறைந்த பகுதியாகவே இருந்து வருகிறது.
கிராம அமைப்பின் சிறப்புகள்: 1974-ம் ஆண்டு கிராம நிர்வாகம் அமைக்கப்பட்டு எண்ணூர் பகுதியில் வசித்து வந்த பர்மா தமிழர்கள் அனைவருக்கும் அன்னை சிவகாமி நகரில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து 43 ஆண்டுகளாக கிராம நிர்வாகிகள் இங்கு தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். கிராம பொதுநல சங்கங்களில் நிர்வாக அமைப்புகளில் சொந்தவீடு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை வழங்கப்படும் நிலையில் அன்னை சிவகாமி நகரில் வாடகைதாரர் உள்ளிட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பவர்கள் அனைவருக்கும் ஓட்டுரிமை வழங்கப்படுகிறது. சொந்தவீடு வைத்திருந்தாலும் அந்த வீட்டில் தொடர்ந்து வசிக்காவிட்டால் கிராம நிர்வாகிகள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கிடையாது என்பது உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இங்கு காலம்காலமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன.
பொதுத் தேர்தலை மிஞ்சிய பரபரப்பு: அன்னை சிவகாமி நகர் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட 15 நிர்வாகிகளுக்கான தேர்தலில் ஒரு அணியாகவே தேர்தலில் போட்டியிட வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாகப் போட்டியிட முடியாது. இதனால் ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிடும் முக்கிய பிரமுகர்கள் தங்களது செல்வாக்குக்குத் தகுந்தவாறு கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றனர். இதில் அரசியல் கட்சிகளின் பொறுப்பில் இருப்பவர்கள் கூட இங்கு தேர்தலில் போட்டியிட்டால் கட்சி சாயம் பூசிக் கொள்வதில்லை. பொதுத்தேர்தலில் இருக்கும் அத்தனை பரபரப்பும் இங்கும் காணப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக ஏராளமான தேர்தல் பிரச்சார பதாகைகள், சுவரொட்டிகள் என களைகட்டியது. மேலும் வீடுவீடாகச் சென்று வாக்குகள் சேகரிப்பது தொடர்ந்து நடைபெற்று வந்தது. காலில் விழும் கலாசராத்துக்கும் குறைவில்லை. இதுபோல மது பாட்டில்களும் தாராளமாக விநியோகிக்கப்பட்ட வந்த நிலையில், சனிக்கிழமை இரவு வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவும் நடைபெற்றது. இதுவரை இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றது கிடையாது. வாக்குக்கு பணம் வாங்கும் கலாச்சாரம் கிராமத் தேர்தல்வரை ஊடுருவியிருப்பது தமிழகத்தின் சாபக்கேடு என கிராமத்தின் மூத்த நிர்வாகிகள் பலர் வேதனை தெரிவித்தனர்.
ஆர்.டி.ஓ. மேற்பார்வையில் நடைபெற்ற தேர்தல்: இக்கிராம நிர்வாகத்திற்கு கடைசியாக 2013-ல் தேர்தல் நடைபெற்ற நிலையில் மீண்டும் 2015-ல் மறு தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படாததால் இரு பிரிவினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து அம்பத்தூர் ஆர்.டி.ஓ. விடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்பட்டது. இதனையடுத்து தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலுக்காக பொதுத் தேர்தலையும் விஞ்சிய அளவில் சுமார் இரு நூறுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வி.கே.ஏழுமலை தலைமையில் ஒரு அணியும், கே.ராமச்சந்திரன் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன. இதற்கான தேர்தல் முடிவு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வாதிகார ஆட்சியால் பாதிக்கப்பட்டு தாயகம் திரும்பிய தமிழர்களிடம் ஐம்பது ஆண்டுகளாக ஜனநாயகம் வளர்ந்தோங்கியுள்ளது பாராட்டத்தக்கது. அதுவும் 7,500 பேர்களை வாக்காளர்களாகக் கொண்ட ஒரு கிராமத்தில் அதன் நிர்வாகமே வாக்காளர் பட்டியல், வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை, தேர்தல் பொறுப்பாளர்கள், பார்வையாளர்கள் நியமனம் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து எவ்வித சலசலப்பும் இன்றி தேர்தலை நடத்தியிருப்பது குடவோலை முறை மூலம் ஜனநாயகத்தை உலகிற்கு முதன்முதலில் அறிமுகம் செய்த தமிழத்திற்குப் பெருமைதான் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரம் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதற்காக ஜனநாயக விரோத, மாற்றுவழிகளைத் தேடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com