தமிழக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள் என்னென்ன?

அதிமுகவின் இரு அணிகளும் இன்று ஒன்றிணைந்துள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள் என்னென்ன?

சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இன்று ஒன்றிணைந்துள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது குறித்த செய்திக் குறிப்பினை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தின் துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பொறுப்பேற்க உள்ளார். அவருக்கு அமைச்சர் ஜெயக்குமார் வகித்து வந்த நிதித் துறை மற்றும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வகித்து வந்த வீட்டு வசதித் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற மேம்பாடு, சிஎம்டிஏ துறைகளும் பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியிடம் இருந்த கால்நடைத் துறை உடுமலை ராதாகிருஷ்ணன் வசம் ஒப்படைக்கப்படுகிறது.

அமைச்சர் செங்கோட்டையன் வசம் இருந்த இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

எம்.சி. சம்பத் வசம் இருந்த சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை சி.வி சண்முகத்துக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கே. பாண்டியராஜனுக்கு தமிழ் அலுவல் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத் துறையும், செங்கோட்டையன் வகித்து வந்த தொல்லியல் துறையும் ஒதுக்கப்படுகிறது.

மேலும், துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வமும், புதிய அமைச்சர்களும் இன்று மாலை 4.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் பதவியேற்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதே போல, அதிமுகவின் கட்சிப் பணிகளுக்காக 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி. முனுசாமியும், வைத்திலிங்கமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com