திருவண்ணாமலையில் சூறைக் காற்றுடன் மழை

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் புத்தகத் திருவிழா அரங்கில் வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் புத்தகங்கள் மழையில் நனைந்து

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் புத்தகத் திருவிழா அரங்கில் வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் புத்தகங்கள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
திருவண்ணாமலையில் நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித் துறை இணைந்து புத்தகத் திருவிழாவை நடத்துகின்றன. இந்த புத்தகத் திருவிழா வரும் 27}ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சூறாவளிக் காற்றுடன் மழை: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு சூறாவளிக் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தொடர்ந்து, 30 நிமிடங்களுக்கும் மேலாக பெய்த மழையால் புத்தகத் திருவிழாவின் இரும்புத் தகர மேற்கூரைகள் காற்றில் பறந்தன. எனவே, மழைநீர் புத்தக அரங்குக்குள் கொட்டியதால், அரிய மற்றும் அதிக விலை கொண்ட புத்தகங்கள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
80 சதவீத அரங்குகள் சேதம்: புத்தகக் கண்காட்சியில் மொத்தம் 120 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 80 சதவீத அரங்குகளில் மழைநீர் கொட்டியது. இதில், பல ஆயிரம் புத்தகங்கள் மழையில் நனைந்தன. புத்தகங்களைப் பாதுகாக்க அந்தந்த பதிப்பகத்தினர் பிளாஸ்டிக் போர்வைகள், கோணிப்பைகளைப் போட்டு மூடினர். நடைபாதையில் எல்லாம் மழைநீர் தேங்கியதால் அரங்கினுள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மாணவ, மாணவிகள் அலறல்: மழை பெய்தபோது 300}க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், பெரியவர்கள், பொதுமக்கள் புத்தகத் திருவிழா அரங்குகளில் இருந்தனர். சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால், புத்தகத் திருவிழாவின் மேற்கூரைகள் பலத்த சத்தத்துடன் காற்றில் பறந்தன.
இரும்புத் தகரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பலத்த சப்தத்தை ஏற்படுத்தின. ஆங்காங்கே மழைநீர் கொட்டியது. இதனால் 300 பேரும் பயத்துடன் இங்கும், அங்குமாக ஓடியதுடன், பயத்தில் கூச்சலிட்டனர்.
ஆட்சியர் ஆய்வு: தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே, விரைந்து வந்து புத்தகத் திருவிழா அரங்குகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மழையில் நனைந்த புத்தகங்களை அரங்குகள் அமைத்திருந்த புத்தக பதிப்பகத்தினர் அழைத்துச் சென்று காண்பித்தனர். இதையடுத்து, புத்தகத் திருவிழாவை உடனே நிறுத்த அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். பின்னர், அரங்குகளில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். புத்தகங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டன.
இன்று மாலை தொடக்கம்: மழையால் சேதமடைந்த மேற்கூரைகளை சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை இரவே தொடங்கப்பட்டது. தொடர்ந்து, தரமான முறையில் மேற்கூரைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வழக்கமாக தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெறும்.
ஆனால், மேற்கூரை சீரமைப்புப் பணியால் திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு புத்தகத் திருவிழா தொடங்கும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பதிப்பகத்தினர் வேதனை:
மழையில் பல ஆயிரம் புத்தகங்கள் நனைந்ததால், ஞாயிற்றுக்கிழமை விறுவிறுப்பான விற்பனை நடைபெறும் என்றும் நம்பியிருந்த புதுதில்லி, ஆந்திரம், தமிழகம் பகுதிகளில் இருந்து வந்திருந்த பதிப்பகத்தினர்வேதனையடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com