தில்லி பணிக்குச் செல்வதில் ஆர்வம் காட்டும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

தில்லி பணிக்குச் செல்வதில் ஆர்வம் காட்டும் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

தமிழக பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தில்லி பணிக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. தில்லிப் பணிக்கான அனுபவத்தை இப்போதே பெற்றால் ஓய்வு பெறும் காலத்துக்கு முன்பாக அங்கு மிக உயரிய பதவியில்

தமிழக பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தில்லி பணிக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. தில்லிப் பணிக்கான அனுபவத்தை இப்போதே பெற்றால் ஓய்வு பெறும் காலத்துக்கு முன்பாக அங்கு மிக உயரிய பதவியில் அமர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

தமிழக பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 280-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வடஇந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான். வட இந்தியாவைச் சேர்ந்த அதிகாரிகள் தமிழகத்திலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புவதில்லை. பலர் தங்களது சொந்தக் காரணங்களுக்காக பிறந்த மாவட்டத்திலோ அல்லது தில்லியில் உள்ள அமைச்சரவை பணியிடங்களிலோ குறிப்பிட்ட காலத்துக்கு பணியாற்றும் வகையில் மாற்றம் கோருவது உண்டு.
ஆனால், இப்போது வட இந்திய அதிகாரிகளுடன் திறமையாகப் பணியாற்றும் தமிழகத்தை சொந்த மாநிலமாகக் கொண்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளும் தில்லிப் பணிக்குச் செல்வது அதிகரித்துள்ளது. கடந்த ஒருசில மாதங்களில் ராஜகோபால், ராஜாராமன், பி.ஆனந்த் உள்ளிட்ட சில அதிகாரிகள் தில்லி பணிக்குச் சென்றுள்ளனர்.
தமிழக பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை தில்லிப் பணியில் இருக்கலாம். அதன்பிறகு எந்த மாநிலத்தின் பிரிவில் தேர்வு செய்யப்பட்டார்களோ அந்த மாநிலப் பணிக்குத் திரும்ப வேண்டும்.
இந்த ஏழு ஆண்டுகளை முதல் மூன்று ஆண்டுகள், அதன் பிறகு நான்கு ஆண்டுகள் என பிரித்துப் பணியாற்றலாம். முதல் மூன்று ஆண்டுகள் தில்லிப் பணியில் இருக்கும் போது, அங்குள்ள பணிப் பதிவேடு பட்டியலில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் பெயர் இடம்பெற்று விடும்
இதன் பின்பு, சம்பந்தப்பட்ட அதிகாரி, செயலாளர், முதன்மைச் செயலாளர் என பதவி உயர்வுகளைப் பெற்று கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்து நிலைக்கு உயரும் போது அவர் தில்லிப் பணிக்குச் சென்றால் அங்கு மத்திய அரசினுடைய ஒரு துறையின் செயலாளர் என்ற உயர்ந்த நிலையை அடைய முடியும்.
தமிழகத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் நிலையில் இருப்பவர்தான், தலைமைச் செயலாளராக வர முடியும். அதன்படி, ஒருவருக்கு மட்டுமே தலைமைச் செயலாளர் வாய்ப்புக் கிடைக்கும். இதர கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகளுக்கு சரியான துறைகளில் பொறுப்புகள் வழங்கப்படுவது இல்லை.
அவர்களுக்கு அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனம், தொழில் மேம்பாட்டுக் கழகம், தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் என எந்த அதிகாரமும் இல்லாத துறைகளாகவே அளிக்கப்படுகின்றன.
எனவே, கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்து நிலைக்கு உயரும் போது தில்லி சென்றால் மத்திய அரசின் ஒரு துறையையே நடத்தும் செயலாளர் பொறுப்புக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது.
உதாரணமாக தமிழகப் பிரிவைச் சேர்ந்த டி.ஜேக்கப், புதுதில்லியில் உள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக உள்ளார்.
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு பணி ஓய்வுக்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்து பெரும்பாலும் கிடைக்கும். அப்போது தனது பணி அனுபவத்தைக் கொண்டு அவருக்கு முக்கியத் துறைகளில் பொறுப்பு அளிக்கப்பட்டால் நன்றாக இருக்கும்.
ஆனால், தமிழகத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்து நிலையில் இருக்கக் கூடிய துறைகள் அனைத்தும் மிக சாதாரணமானவை. அதில் பணிக் காலத்தில் பெற்ற அனுபவங்களைக் கொண்டு எந்த சாதனைகளையும் மேற்கொள்ள முடியாது. இதற்குப் பதிலாக தில்லிப் பணிக்குச் சென்றால் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைக்கும். இந்த எண்ணத்தில்தான் அரசு செயலாளர், முதன்மைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் போது தில்லிக்குச் சென்று அங்குள்ள பணிப் பட்டியலில் தங்களது பெயரை அதிகாரிகள் பதிவு செய்து விடுகின்றனர்.
பதவி உயர்வு பெற்று கூடுதல் தலைமைச் செயலாளர் ஆனவுடன் தில்லியில் எளிதில் துறைச் செயலாளராகி விட முடியும். இதுதான், தமிழக அதிகாரிகள் தில்லிப் பணிக்குச் செல்வதன் முக்கியக் காரணம். இது தவிர , தமிழக அரசியல் சூழ்நிலைகளும் ஒரு காரணியாக இருப்பதை மறுப்பதற்கில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com