மேக்கேதாட்டு விவகாரம்: உண்மைக்கு மாறாக பேசும் முதல்வர் அன்புமணி ராமதாஸ்

மேக்கேதாட்டு அணை கட்ட ஒப்புதல் அளித்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உண்மைக்கு மாறாக பேசுகிறார் என்று எம்.பி. அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
மேட்டூர் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி சேலத்தில் துண்டுப் பிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ்.
மேட்டூர் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றக் கோரி சேலத்தில் துண்டுப் பிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ்.

மேக்கேதாட்டு அணை கட்ட ஒப்புதல் அளித்த விவகாரத்தில் தமிழக முதல்வர் உண்மைக்கு மாறாக பேசுகிறார் என்று எம்.பி. அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் முழுவதும் பயன்படும் வகையில் மேட்டூர் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றி நீர் மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும், ஆறுகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக இளைஞரணித் தலைவரும், தருமபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் இரு நாள்களாக மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதில் இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை மேட்டூர் உபரிநீர் மேலாண்மைத் திட்டம் குறித்து சேலம் ஐந்து சாலைப் பகுதியில் பொதுமக்கள், வணிகர்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து இருசக்கர வாகனப் பேரணியாகச் சென்று திருமணிமுத்தாறு பகுதியைப் பார்வையிட்டார்.
முன்னதாக அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியது: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மேட்டூர் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், மேக்கேதாட்டுவில் அணைக் கட்ட தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், தமிழக முதல்வர் அதனை மறுத்துள்ளார்.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.
இப்பிரச்னைக்காக தமிழகத்தில் பெரிய அளவிலான போராட்டம் நடைபெறும். அதற்காக விவசாய சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மேட்டூர் அணை தூர்வாரும் பணி முழுமையாக நடைபெறவில்லை. அது கண்துடைப்பு ஆகும்.
தமிழகத்தில் டெங்கு பிரச்னை உள்ளதை முன்கூட்டியே ஏற்றுக் கொண்டிருந்தால் பொதுமக்களை விழிப்புணர்வு அடையச் செய்திருக்கலாம்.
ஜெயலலிதா இறப்புக்கு பின்னர் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அவர் வாழ்ந்த வீட்டை நினைவகமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம்.
அப்போது ஜெயலலிதா குற்றவாளியாக இல்லை. அதற்குப் பிறகு வந்த தீர்ப்பில் சசிகலா சிறைக்கு சென்றார்.
ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு தமிழக அரசின் நிதி ஒரு பைசா கூட செலவழிக்கக் கூடாது. அவர்களது கட்சி நிதியை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com