கடந்த 2 மாதங்களாக கருணாநிதி என் கனவில் வருகிறார்: வைகோ பேட்டி

திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்து நலம் விசாரித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
கடந்த 2 மாதங்களாக கருணாநிதி என் கனவில் வருகிறார்: வைகோ பேட்டி

திமுக தலைவர் கருணாநிதி சமீபகாலமாக உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து பல அரசியல் கட்சித் தலைவர்களும் அவரது உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், திமுக தரப்பிலும் அவ்வப்போது அவரது உடல்நலம் குறித்த தகவல்களை தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திக்க கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு நடுவே இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. சுமார் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு கருணாநிதியைச் சந்தித்தார் வைகோ. இந்த சந்திப்பின்போது அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.

கோபாலபுரத்துக்கு செவ்வாய்கிழமை இரவு சுமார் 8.15 மணியளவில் சென்ற வைகோவை திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் வாசல் வரை வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.

தமிழகத்தில் நிலவி வரும் நிலையற்ற அரசியல் சூழல்களுக்கு மத்தியில் இந்தச் சந்திப்பு பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், திமுக மற்றும் கருணாநிதியுடனான தனது நிகழ்வுகளை செய்தியாளர்களிடம் வைகோ பகிர்ந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

திமுக ஆரம்ப காலத்தில் இருந்தே எனக்கு அதன் மீது மிகுந்த ஈடுபாடு உருவானது. இதனால் திமுகவில் இணைந்து பொது வாழ்க்கையை துவங்கினேன்.

அப்போது முதல் திமுக தலைவர் கருணாநிதிதான் எனக்கு பக்கபலமாக இருந்துள்ளார். நான் பல உச்சங்களை அடைய அவரின் ஆதரவுதான் காரணம். இடையில் பல கசப்பான சம்பவங்களும் நடந்தன.

இருந்தாலும் அவரின் நினைவுகள் என் மனதில் கல்வெட்டுகளாய் பதிந்துள்ளது. கடந்த 2 மாதமாக எனது கனவில் கருணாநிதி அடிக்கடி வருகிறார். இதனால் என் மனம் மிகவும் வேதனை அடைந்துள்ளது.

அவரை இந்த நிலையில் பார்க்க மிகவும் கடினமாக உள்ளது. அவர் பூரண உடல்நலம் பெற்று விரைவில் பேசுவார். செப்டம்பர் 5-ந் தேதி நடைபெறவுள்ள முரசொலி விழாவுக்கு ஸ்டாலின் என்னை அழைத்தார். நிச்சயம் நான் அதில் கலந்துகொண்டு பேசுவேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com