அதிமுக இணைப்பு: தலைவர்கள் கருத்து

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்திருப்பது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக இணைப்பு: தலைவர்கள் கருத்து

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்திருப்பது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் எதுவும் இன்றுவரை வெளிவரவில்லை. விசாரணைக் கமிஷன் நியமனம் என்கிற கண்துடைப்பு அறிவிப்பு மட்டுமே வெளிவந்துள்ளது. இன்னும் அதற்கு நீதிபதி யார் என்றே தெரியவில்லை. ஓ.பன்னீர்செல்வம் கேட்ட சிபிஐ விசாரணை, பொறுப்பில் உள்ள உச்சநீ திமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை என்பதையெல்லாம் பதவிக்காக மறந்து விட்டு, விசாரணை கமிஷன் என்ற அறிவிப்பை ஏற்றுக்கொள்வதாகக் கூறி இணைந்துள்ளனர். ஓபிஎஸ் நடத்தியுள்ள இந்த நாடகம் அதிமுக தொண்டர்களையும், தமிழக மக்களையும் ஏமாற்றிய செயலாகும்.
பிகாரில் உள்ள ஆளுநர் காட்டிய அவசரத்தை தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரும் காட்டியிருப்பது, பா.ஜ.க.வின் ஆளுமை இந்த இணைப்பில் எந்தளவுக்கு ஆழமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அணிகள் இணைப்புக்காக இரண்டு அணிகளும் கட்சி அலுவலகத்துக்கு கிளம்பிய அதேநேரத்தில், பதவி ஏற்பு நிகழ்வுகளுக்காக ஆளுநர் மாளிகைக்கு விரைகிறார் தலைமைச் செயலாளர். ஆக, அனைத்துமே மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவினால் திரைக்கதை எழுதப்பட்டு, முழுமையாக ஒத்திகை பார்க்கப்பட்டு அரங்கேற்றப்பட்டுள்ள காட்சிகள்.
ராமதாஸ் (பாமக): எங்கிருந்தோ எழுதி இயக்கப்படும் நாடகத்தின் ஒரு கட்டமாக அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துள்ளன. சசிகலா குடும்பத்தினரை நீக்க வேண்டும் என்பதுதான் ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கியமான கோரிக்கையாக இருந்தது. அந்தக் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், எந்த அடிப்படையில் இணைந்தனர் என்பதை மக்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் விளக்க வேண்டும். இயற்கைக்கு எதிராக நடக்கும் எந்த வினையையும் இயற்கையே சரி செய்யும். தற்போது ஏற்பட்டுள்ள அதிமுக இணைப்பையும் மண்ணைக் கவ்வச் செய்யும் வலிமை இயற்கைக்கும், மக்களுக்கும் உண்டு.
ஜி.கே.வாசன் (தமாகா) : அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாகியிருப்பதன் மூலம் தமிழக மக்கள் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களில் முக்கிய கவனம் செலுத்தி உடனடியாக அந்தத் திட்டங்களைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி): அதிமுகவின் இரு அணிகளும் இணைந்திருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். நூற்றாண்டு காணும் எம்ஜிஆரின் கனவுகளையும், ஜெயலலிதாவின் நல்லெண்ணங்களையும் நிறைவேற்றி தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் இந்த இணைப்பு கொண்டு செல்லும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com