சென்னை மெரீனாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் திங்கள்கிழமை இரவு மலர்வளையம் வைத்து வணங்கிய தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்.
சென்னை மெரீனாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் திங்கள்கிழமை இரவு மலர்வளையம் வைத்து வணங்கிய தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்.

ஆளுநருடன் இன்று சந்திப்பு: முதல்வரை மாற்றக் கோருகின்றனர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்

தமிழக ஆளுநரை வித்யாசாகர் ராவை அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் செவ்வாய்க்கிழமை (ஆக.22) சந்திக்க உள்ளனர்.

தமிழக ஆளுநரை வித்யாசாகர் ராவை அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் செவ்வாய்க்கிழமை (ஆக.22) சந்திக்க உள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோர உள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அணியும் திங்கள்கிழமை இணைந்தன. இதனையடுத்து அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.
இந்த நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன், செந்தில்பாலாஜி உள்பட 18 பேரும் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு இரவு 8.20 மணியளவில் வந்தனர். அங்கு சுமார் 20 நிமிஷங்கள் அமர்ந்து மெளனமாக தியானத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் கூட்டாக அளித்த பேட்டி: ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் ஒன்றுகூடி அவசர பொதுக்குழுவை கூட்டினர். அதில் வி.கே. சசிகலா தாற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வழக்கின் காரணமாக சசிகலா முதல்வராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இணைக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தச் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சசிகலா நியமித்தார். இதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த 12 உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்தனர். நாங்கள் 6 மணி நேரம் சட்டப்பேரவையில் காத்திருந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்தோம். ஆனால், 10 எம்.எல்.ஏ.க்களை வைத்துக் கொண்டு, இரட்டை இலைச் சின்னத்தை முடக்கிய, கட்சியை உடைத்த, ஊழல் ஆட்சி என்று குற்றம் சுமத்திய ஓ.பன்னீர்செல்வத்தை தற்போது வலுக்கட்டாயமாக ஆட்சியில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன?
10 எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் கூட தனது ஆதரவாளர்களிடம் கலந்து பேசி, ஆலோசித்துவிட்டு அணிகள் இணைப்புக்குச் சென்றார். 122 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி எங்களிடம் ஏன் கலந்து ஆலோசிக்கவில்லை? நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஓ.பன்னீர்செல்வத்தின் பகுதியான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் மாற்றி வாக்களித்திருந்தால் கூட இந்த ஆட்சி அமைந்திருக்காது.
ஆளுநருடன் சந்திப்பு: தமிழக ஆளுநரை செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சந்திக்க அனுமதி கிடைத்துள்ளது. அவரைச் சந்தித்து இது குறித்துப் பேச உள்ளோம்.
சசிகலாவை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவதாகச் சொல்வதற்கு யாருக்கும் அதிகாரமும் இல்லை, தகுதியும் இல்லை. அதிமுக விதிகளின்படி யாரையும் நீக்கவும் சேர்க்கவும் பொதுச் செயலாளருக்கே அதிகாரம் உள்ளது.
எனவே, பொதுக்குழுவைக் கூட்ட சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இவர்கள் சசிகலாவை நீக்குவதாகச் சொல்வது கண்துடைப்பு என்று தெரிவித்தனர்.
முதல்வரை மாற்ற வேண்டும்: தமிழக ஆளுரைச் சந்திக்கும் டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தேர்ந்தெடுத்தது நாங்கள்தான் என்றும் ஆனால், எங்களை கலந்து ஆலோசிக்காமல் அவர் செயல்படுகிறார் என்றும் அதனால், அவரை மாற்ற வேண்டும் என்றும் கோரி மனு அளிக்க உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com