கருத்து வேறுபாடுகள் இன்றி பணியாற்றுவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி-துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அறிவிப்பு

கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இணைந்து பணியாற்றுவோம் என்று முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அறிவித்தனர்.
கருத்து வேறுபாடுகள் இன்றி பணியாற்றுவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி-துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அறிவிப்பு

கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இணைந்து பணியாற்றுவோம் என்று முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அறிவித்தனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இரு அணிகள் இணைப்பு நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உரையாற்றினர். அவர்கள் பேசியது:
முதல்வர் பழனிசாமி: தன் வாழ்நாளில் முழுவதும் கட்சிக்காக உழைத்த இருபெரும் தலைவர்களின் ஆத்மா நிறைவேறும் வகையில் இணைந்திருக்கிறோம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த ஆறு மாத காலத்தில் எவ்வளவோ பிரச்னைகளைச் சந்தித்துள்ளோம்.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மனமுவந்து, இந்தக் கட்சி இணைந்து இருபெரும் தலைவர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்று நானும், அண்ணனும் (ஓ.பன்னீர்செல்வம்) உடனடியாக முடிவு எடுத்தோம்.
ஒன்றுபட்ட அதிமுக தழைத்து நிற்க வேண்டும். இருபெரும் தலைவர்கள் உழைத்து, உயிரையும் பொருட்படுத்தாமல் உருவாக்கிக் கொடுத்த இந்த இயக்கமும், ஆட்சியும் நிலைத்து நின்று அவர்களது கனவுகள் நனவாக வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களது எண்ணங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். மக்களோடு மக்களாக இருந்து கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், ஒன்றுகூடி பேசி ஒற்றுமை ஏற்படுத்தி இந்தக் கட்சி வலிமை பெறும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கும் இயக்கம் அதிமுக.
வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி இது. இப்படியிருக்குமா, அப்படியிருக்குமா, இடையிலே புகுந்து விடலாம் என்று நினைத்தோருக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளோம்.
எந்தவொரு சூழ்நிலையிலும் கருத்து வேறுபாடுகள், மனமாச்சரியங்கள் இல்லாமல், கலங்கம் ஏற்படாமல் பணியாற்றி கழகத்துக்கும், ஆட்சிக்கும், பெருமை சேர்ப்போம்.
இரட்டை இலை சின்னத்தை மீட்போம். எதிரிகளை வீழ்த்துவோம். எனக்குப் பிறகும் 100 ஆண்டுகள் அதிமுக ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் என்றார் மறைந்த ஜெயலலிதா. அதற்கேற்ப பணியாற்றி அலரது லட்சிய வார்த்தைகளை நிறைவேற்றுவோம்.
ஓ.பன்னீர்செல்வம்: இன்று உங்களை காணுகின்ற நல்ல சூழ்நிலையை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா உருவாக்கிக் கொடுத்துள்ளது.
45 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தலைமையை ஏற்று, அசைக்க முடியாத எஃகு கோட்டையாக சரித்திரத்தில் இடம்பெற்ற இயக்கமாகும் அதிமுக.
சிறிய இடைவெளியில் ஒருதாய் மக்களின் சகோதரர்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்தாலும், அதை உதறிவிட்டு தலைவர்கள் எதற்காக இந்த இயக்கத்தை வளர்த்தார்கள் என்ற நல்ல எண்ணத்தை இதயத்தில் ஏந்தி, எங்களை யாரும் பிரிக்க முடியாது, நாங்கள் ஜெயலலிதாவின் பிள்ளைகள் என்ற உணர்வுடன் கூடி இணைந்து தமிழக மக்கள் மட்டுமல்லாது, இந்த இயக்கத்தில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்கள், ஆணிவேராகத் தாங்கிப் பிடித்துள்ள அவர்களின் ஏக்கக் கனவுகளை நிறைவேற்றும் வகையில் இணைந்துள்ளோம்.
இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த எடப்பாடி பழனிசாமி, தலைமைக் கழக நிர்வாகிகள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மூத்த முன்னோடிகள் அனைவருக்கும் நன்றி. நம்மை எதிர்கொள்ளும் கட்சிகளை எதிர்கொண்டு வெற்றி அடைவதற்கு இந்த இணைப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க பாலமாக அமையும் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com