குடியரசுத் தலைவரை சந்திக்க தமிழக விவசாயிகள் மனு

சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஜந்தர் மந்தரில் போராடி வரும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
தில்லி ஜந்தர் மந்தரில் யோகாசனம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள்.
தில்லி ஜந்தர் மந்தரில் யோகாசனம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள்.

சந்திக்க நேரம் ஒதுக்கக் கோரி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஜந்தர் மந்தரில் போராடி வரும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
விவசாயிகளின் வங்கிக் கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் இச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இப்போராட்டம் 37-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் கேட்டும், பிரதமரைச் சந்திக்க நேரம் ஒதுக்க ஏற்பாடு செய்யுமாறும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு கோரிக்கை விடுக்கும் மனுவை குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள பதிவு அலுவலத்தில் இச்சங்கத்தைச் சேர்ந்த பழனிவேல், ஜான் மெல்கியோராஜ், வசந்த், பிரேம் ஆகியோர் அளித்தனர்.
இது தொடர்பாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நிலவிய வறட்சி காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளில் வாங்கிய விவசாயக் கடன்களை விவசாயிகள் திருப்பிச் செலுத்த முடியாமல் உள்ளனர். 400-க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே, வறட்சி நிவாரணமாக ரூ. 40 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் எனவும், விவசாயிகளின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் இதுநாள் வரை அமைக்கப்படவில்லை. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். தேசிய நதிகள் இணைப்புக்காக வாரியத்தை அமைக்க வேண்டும். விவசாய விளை பொருகள்களுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த வேண்டும். 60 வயது அடைந்த விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் வழங்க வகை செய்ய வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் தேசிய - தென்னிந்திய விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளைச் சந்திக்க குடியரசுத் தலைவர் நேரம் ஒதுக்க வேண்டும். பிரதமரையும் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜந்தர் மந்தரில் விவசாயிகள் யோகா ஆசனங்களை மேற்கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com