துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், அவரது அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே. பாண்டியராஜன் அமைச்சராகவும் பொறுப்பேற்றுக்
துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், அவரது அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே. பாண்டியராஜன் அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
ஆளுநர் மாளிகையில்...: புதிதாக இரண்டு அமைச்சர்கள் பதவியேற்பு விழா, ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. இருவருக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சி 5 நிமிடங்களில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, ஆளுநருடன் அமைச்சர்கள் அனைவரும் அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இணைத்து வைத்த ஆளுநர்: ஆளுநர் மாளிகையில் இரண்டு அமைச்சர்களும் பதவியேற்ற பிறகு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரின் கரங்களையும் பிடித்தும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இணைத்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக, இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் மறைந்த முதல்வர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். அண்ணா ஆகியோரின் நினைவிடங்களுக்கு கூட்டாகச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டனர்.
என்னென்ன பதவிகள்? புதிதாக பொறுப்பேற்ற இரண்டு பேருக்கு ஒதுக்கப்பட்ட துறை விவரங்களுடன், ஓரிரு அமைச்சர்களுக்கு துறைகளும் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஆளுநரின் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் இருந்த நிதித் துறையும், அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனிடம் இருந்த வீட்டுவசதி, குடிசை மாற்று வாரியம், நகர் ஊரமைப்புத் துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகிய துறைகள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
மற்றொரு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட கே.பாண்டியராஜனுக்கு, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் கலாசாரம், தொல்லியல் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் துறைகளை முறையே அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் வகித்து வந்தனர்.
வீட்டு வசதித் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட உடுமலை கே.ராதாகிருஷ்ணனுக்கு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருந்த பி.பாலகிருஷ்ண ரெட்டிக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் இருந்த சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறையானது சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் எண்ணிக்கை உயர்வு: தமிழக அமைச்சரவையில் இரண்டு பேர் புதிதாக இணைக்கப்பட்டதன் மூலம், அமைச்சர்களின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது. முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அடுத்த நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருவார். இதன்பின், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் அமைச்சரவை வரிசைப் பட்டியலில் இடம்பெறுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com