துரோகங்கள் வென்றதாக வரலாறு இல்லை: டி.டி.வி. தினகரன்

துரோகங்கள் வென்றதாக வரலாறு இல்லை என அதிமுக அணிகள் (எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்) இணைப்பு குறித்து அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது சுட்டுரைப் பக்கத்தில்
துரோகங்கள் வென்றதாக வரலாறு இல்லை: டி.டி.வி. தினகரன்

துரோகங்கள் வென்றதாக வரலாறு இல்லை என அதிமுக அணிகள் (எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம்) இணைப்பு குறித்து அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதிமுகவிலிருந்து கடந்த சில மாதங்களாகப் பிரிந்திருந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அணிகள் சென்னையில் திங்கள்கிழமை (ஆக.21) இணைந்தன.
இந்த நிலையில் இது குறித்து அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- 'இன்று நடந்தது இணைப்பே அல்ல. சில நபர்களின் சுய லாபத்துக்காகவும் பதவி ஆசைக்காகவும் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்குமான வணிக ரீதியான உடன்படிக்கை.
இந்த உடன்படிக்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது எல்லாம்வல்ல இறைவனுக்கே வெளிச்சம். கடந்த 1989-இல் தொண்டர்களின் விருப்பத்துக்கு இணங்க, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டு, அவர் தலைமையில் ஒன்றிணைந்தார்கள். இன்றோ, இவர்களாலேயே ஏற்று கொள்ளப்பட்ட பொதுச்செயலாளரை (சசிகலா) நீக்குவோம் என்ற அறிவிப்போடு ஏற்பட்டுள்ள உடன்படிக்கை தொண்டனால் ஜீரணிக்க முடியாத துரோகம்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் ஓ.பன்னீர்செல்வத்தையும் பின்னர் பழனிசாமியையும் முதல்வராக்கிய பொதுச்செயலாளருக்கு (சசிகலா) துரோகம் செய்த நபர்களை அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் மன்னிக்க மாட்டார்கள். இரட்டை இலை முடங்குவதற்கு காரணமான பன்னீரோடு கைகோர்க்கும் அளவுக்கு, சிலரது பதவி ஆசை கண்ணை மறைக்கிறதென்றால் எப்படி தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்கள்? இந்தத் துரோகிகளால் எப்படி இரட்டை இலையை மீட்க முடியும்?
நேற்று வரை ஊழல் ஆட்சி நடைபெறுவதாகச் சொன்ன பன்னீர்செல்வத்தோடு எப்படித்தான் இவர்களால் இன்றைக்கு கைகோக்க முடிகிறதோ? இந்தத் துரோகிகளால் ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்குவதற்காகவே, கோடான கோடி கழக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசியல் பயணம் தொடரும். துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை என டிடிவி தினகரன் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com