24 எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் மட்டுமே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முடியும்

தமிழக அமைச்சரவையின் மீது நம்பிக்கையின்மையைத் தெரிவிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வர 24 எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவு தேவை. அதற்குக் குறைவாக இருந்தால் அத்தகைய தீர்மானத்தைக் கொண்டு

தமிழக அமைச்சரவையின் மீது நம்பிக்கையின்மையைத் தெரிவிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வர 24 எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவு தேவை. அதற்குக் குறைவாக இருந்தால் அத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வர முடியாது.
சட்டப் பேரவையில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு, அந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதே சமயம், டிடிவி தினகரனுக்கு 19 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளிப்பதால் ஆட்சிக்கு மிகப் பெரிய அளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழக சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் அதிமுக 136 இடங்களைக் கைப்பற்றியது.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா கடந்த டிசம்பரில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை (பேரவைத் தலைவருடன் சேர்த்து) 135-ஆக உள்ளது.
பிரிந்த அணிகள்: அதிமுக இரு அணிகளாகப் பிரிந்த போது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 122 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அவருடன் சேர்த்து 10 பேர் இருந்தனர். இரு அணிகள் இணைந்த பிறகு, அதிமுகவின் பலம் உயர்ந்தாலும், டிடிவி தினகரன் அணிக்கு இப்போது வரை 19 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால், ஆளும் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 116 ஆகக் குறைந்துள்ளது. இது பெரும்பான்மை எண்ணிக்கையை (117) விட ஒன்று குறைவாகும். இந்தக் காரணத்தாலேயே தமிழக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டுமென திமுக கோரிக்கை வைத்துள்ளது.
சட்டப் பேரவையில் ஓர் அமைச்சரவையின் மீது நம்பிக்கையின்மையைத் தெரிவிக்கும் தீர்மானத்தை பேரவை உறுப்பினர்களே கொண்டு வரலாம் என பேரவை விதியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விதி 72 உட்பிரிவு 1-இல் தெரிவிக்கப்பட்ட விவரம்:
அமைச்சரவையின் மீது நம்பிக்கையின்மையைத் தெரிவிக்கும் தீர்மானம் முறைப்படி உள்ளது என்று பேரவைத் தலைவர் கருதினால் அதனைப் பேரவைக்குப் படித்துக் காட்டி அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். 24-க்குக் குறையாத உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆதரவைத் தெரிவித்தால் பேரவை அனுமதி கொடுத்து விட்டது என்று அறிவித்து அனுமதி அளிக்கப்படும்.
இந்த அனுமதி அளிக்கப்பட்ட நாளில் இருந்து பத்து நாள்களுக்கு மேற்படாது பேரவைத் தலைவர் குறிப்பிடும் நாளில், அந்தத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும். 24-க்குக் குறைவான உறுப்பினர்கள் எழுந்து நின்றால், பேரவை அனுமதி கொடுக்கவில்லை என்று பேரவைத் தலைவர் அறிவித்து விடுவார் என விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவை விதிப்படி அமைச்சரவையின் மீது டிடிவி தினகரன் அணியினர் நம்பிக்கையின்மை தெரிவிக்க வேண்டுமானால், அவர்களுக்கு 24 உறுப்பினர்கள் தேவை. ஆனால், இப்போது வரை 19 பேர் மட்டுமே இருக்கிறார்கள். எனவே, டிடிவி தினகரனுக்கான ஆதரவு எம்.எல்.ஏ.-க்களின் எண்ணிக்கை உயர்ந்தால் சட்டப் பேரவை கூட்டப்படும் போது அமைச்சரவையின் மீதான நம்பிக்கையின்மையைத் தெரிவிக்கும் தீர்மானத்தை அவர்கள் கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
திமுக கொண்டு வருமா? சட்டப் பேரவையில் திமுகவுக்கு 89 உறுப்பினர்கள் இருக்கின்றனர். டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கையின்மைத் தீர்மானத்தைக் கொண்டு வர முடியாத பட்சத்தில், பிரதான எதிர்க்கட்சியான திமுக அத்தகைய தீர்மானத்தைக் கொண்டு வருவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது.
ஆனால், இந்த விவகாரத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் எத்தகைய முடிவுகளை எடுக்கப் போகிறார் என்பதே முக்கியமானது. அவர் சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபாலுக்கு எந்தவகையான உத்தரவுகளை பிறப்பிக்கப் போகிறார் என்பதைப் பொருத்தே திமுக, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்களின் செயல்பாடுகள் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com