அனுமதியின்றி பள்ளிகள் நடத்துபவர்களை கைது செய்ய விதிகள் வகுக்காதது ஏன்?: அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் அனுமதியில்லாமல் பள்ளிகள் நடத்துபவர்களைக் கைது செய்து, தண்டனை பெற்று தரும் அளவுக்கு விதிகளை அரசு வகுக்காதது ஏனென்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அனுமதியின்றி பள்ளிகள் நடத்துபவர்களை கைது செய்ய விதிகள் வகுக்காதது ஏன்?: அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் அனுமதியில்லாமல் பள்ளிகள் நடத்துபவர்களைக் கைது செய்து, தண்டனை பெற்று தரும் அளவுக்கு விதிகளை அரசு வகுக்காதது ஏனென்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அப்பச்சிமார் வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி அனுமதியைப் புதுப்பிக்க கோரி அனுப்பிய விண்ணப்பத்தை தமிழக அரசு திருப்பி அனுப்பியது. இதை எதிர்த்து, அப்பள்ளி நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:
கடந்த 2009 -ஆம் ஆண்டு டிசம்பர் முதல் மனுதாரர் பள்ளியின் அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை.
பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளின் மெத்தனம் மற்றும் அலட்சிய போக்கே, இந்த நிலைக்கு காரணம். மேலும், அனுமதியில்லாத பள்ளிகளை மூட அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த 2009 -ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, அங்கீகாரம் இல்லாமல் எந்தப் பள்ளியும் செயல்பட முடியாது.
தற்போது உள்ள பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுள்ளனவா, இல்லையா என்பதை கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அவற்றை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.
எனவே, இந்த வழக்கில் பள்ளி கல்வித் துறை செயலாளரை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன்.
தமிழகத்தில் மொத்தம் எத்தனை பள்ளிகள் உள்ளன, அவற்றில் எத்தனை அங்கீகாரம் இல்லாமல் இயங்குகின்றன, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள், அங்கீகாரம் பெற்ற பிறகே பள்ளிகள் மாணவர் சேர்க்கை நடத்துகின்றனவா, அனுமதியில்லாமல் பள்ளிகள் நடத்துபவர்களைக் கைது செய்வது, தண்டனை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க ஏன் விதிகள் வகுக்கப்படவில்லை என்பன உள்ளிட்ட 13 கேள்விகளுக்கு ஆகஸ்ட் 30 -ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நீதிபதி என்.கிருபாகரன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com