எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும்
எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): அதிமுக அணிகள் இணைந்ததால் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஊழல் புகார் கூறிவந்த எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பாஜகவின் ஆணைக்கேற்ப முதல்வர், துணை முதல்வர் பதவியை பங்கிட்டுள்ளனர். இந்நிலையில் டிடிவி தினகரனின் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, சட்டப்பேரவையைக் கூட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட வேண்டும்.
அன்புமணி (பாமக): டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரைச் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக கடிதம் அளித்துள்ளனர். இதனால், தற்போதைய அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. பதவியில் நீடிக்கும் தார்மீக உரிமையை அரசு இழந்துவிட்டது. எனவே, பேரவையை அடுத்த 3 நாள்களில் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும்.
தொல்.திருமாவளவன் (விசிக): தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை எழுத்துப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளதால், அதிமுக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. சட்டப்பேரவையைக் கூட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பலத்தை நிரூபிக்க வேண்டும். ஆட்சியில் இருப்பவர்கள் பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதால், தமிழகத்தில் வகுப்புவாத ஆபத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தைக் காப்பாற்ற மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்.
தமிழருவி மணியன் (காந்திய மக்கள் இயக்கம்): 19 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதல்வருக்கு எதிராக மனு கொடுத்துள்ள நிலையில், எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து அதிகார நாற்காலியை விட்டு இறங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராக இருக்க வேண்டிய ஆளுநர் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com