'கருணாநிதியின் காந்தக் குரல் மீண்டும் ஒலிக்கும்'

திமுக தலைவர் கருணாநிதியின் காந்தக் குரல் மீண்டும் ஒலிக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த மதிமுக பொதுச்செயலர் வைகோ. உடன் (இடமிருந்து) திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன், மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி,
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த மதிமுக பொதுச்செயலர் வைகோ. உடன் (இடமிருந்து) திமுக முதன்மைச் செயலர் துரைமுருகன், மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி,

திமுக தலைவர் கருணாநிதியின் காந்தக் குரல் மீண்டும் ஒலிக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு வைகோ செவ்வாய்க்கிழமை இரவு 8.15 மணியளவில் வந்தார். அவரை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் ஆகியோர் வரவேற்றனர். கருணாநிதியைச் சந்தித்து வைகோ நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறியது: 1964-இல் மாநிலக் கல்லூரியின் விக்டோரியா விடுதியில் தமிழ் மன்றத் தலைவராக இருந்தேன். தமிழ் மன்ற நிகழ்வில் பேசுவதற்கு கருணாநிதியை அழைக்க முதன்முதலாக கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தேன். புறநானூறு என்ற தலைப்பில் கருணாநிதி உரையாற்றினார். என்னை முதன்முதலாக வைகோ என்று அழைத்தவர் கருணாநிதிதான். அதற்கு முன் யாரும் என்னை இப்படி அழைத்ததில்லை.
மாநிலங்களைவைத் தேர்தலில் நான் நிறுத்தப்பட்டபோது தோற்றுவிடுவேன் என்று நினைத்தேன். அப்போது சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் வைகோவுக்கு எதிராக ஓர் ஓட்டு மாற்றி விழுந்தாலும் எனக்கு மணிவிழா நடக்காது, மரண விழாதான் நடக்கும் என்றார்.
நிழலாக...: மொத்தம் 29 ஆண்டுகள் கருணாநிதியின் நிழலாக இருந்தேன். கருணாநிதியின்மேல் தூசு படவும் அனுமதிக்க மாட்டேன். நான் ஈழம் சென்றிருந்தபோது என் தம்பியை இழந்து துடித்துக் கொண்டிருக்கிறேன் என்றார். இந்த அன்புகள் எல்லாம் என் ஆழ் மனதில் பதிந்துள்ளன. என்னை அரசியலில் வளர்த்தெடுத்தவர் கருணாநிதான்.
கனவில் கருணாநிதி: கருணாநிதியின் உடல்நிலை சரியில்லை என்று அறிந்ததும் மனவேதனை அடைந்தேன். கடந்த 2 மாதங்களாக அடிக்கடி என் கனவில் கருணாநிதி வந்து கொண்டிருந்தார். தற்போது வீட்டில் அவரைச் சந்தித்தபோது என் கையைப் பற்றிக் கொண்டார். பற்றிய கையை விடவேயில்லை. என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். அவர் கண்களிலும் கண்ணீர். பேச முயற்சித்தார், கழுத்தில் குழாய் பொருத்தப்பட்டுள்ளதால் அவரால் பேசமுடியவில்லை. தயாளு அம்மாளிடம் என்னை அழைத்துச் சென்ற ஸ்டாலினும், துரைமுருகனும் யார் என்று தெரிகிறதா என்று கேட்டனர். அதற்கு அவர் வைகோ என்றார்.
நான்போய் வருகிறேன் என்று கருணாநிதியைப் பார்த்துச் சொன்னேன். என்னைப் பிரிய மனமில்லாமல் புன்முறுவல் செய்தார். அந்தச் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. அந்தப் பார்வையில் ஆயிரம் முழக்கங்கள், அந்தக் கண்ணீரில் ஆயிரம் செய்திகள் உள்ளன.
கருணாநிதி நல்ல நினைவாற்றலோடு இருக்கிறார். அவர் விரைவில் நலம் பெறுவார், திராவிட இயக்கத்தின் காந்தக்குரல் மீண்டும் ஒலிக்கும்.
முரசொலி பவளவிழாவில் பங்கேற்பு: செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெறும் முரசொலி பவளவிழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் என்னை அழைத்தார். நானும் பங்கேற்பதாகத் தெரிவித்தேன். அதைக் கருணாநிதியிடம்
தெரிவித்தபோது மீண்டும் புன்முறுவலித்தார். கருணாநிதியின் உடல் நிலையால் என் மனதில் படிந்த கனத்த சுமை, அவரைக் கண்டதால் ஏற்பட்ட நெகிழ்ச்சியோடு, அவர் நலம் பெற வேண்டும் என்று இயற்கை அன்னையை வேண்டுகிறேன். முரசொலி விழாவில் பங்கேற்றுப் பேசுவேன் என்றார்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு: 2015-ஆம் ஆண்டில் மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதியின் திருமணம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கருணாநிதியும் வைகோவும் சந்தித்துக் கொண்டனர். அதன் பிறகு 2016 டிசம்பர் மாதம் காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைச் சந்திக்க வைகோ வந்தார். அப்போது திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்ததால், கருணாநிதியைச் சந்திக்காமல் திரும்பினார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் சந்தித்துள்ளார்.
கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள், மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழி, மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com