டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதி முன்பு புதுவை ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டம்-போலீஸார் குவிப்பு

புதுச்சேரியில் டிடிவி. தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதி முன்பு புதுச்சேரி மாநில ஓபிஎஸ்-இபிஸை ஆதரவாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதி முன்பு புதுவை ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டம்-போலீஸார் குவிப்பு

புதுச்சேரியில் டிடிவி. தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதி முன்பு புதுச்சேரி மாநில ஓபிஎஸ்-இபிஸை ஆதரவாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர். தினகரன் கொடும்பாவியையும் எரித்ததால் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் முதல்வர் இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையிலான பிரிவுகள் இணைந்தன. ஓபிஎஸ் துணை முதல்வராகவும், அவரது தரப்பு எம்.எல்.ஏக்கள் அமைச்சராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர். இதற்கு டிடிவி தினகரன் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் முதல்வர் எடப்பாடி அரசுக்கான ஆதரவை திரும்பப் பெறுவதாகக் கூறி ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் அளித்தனர். பின்னர் அனைவரும் பாதுகாப்பு கருதி புதுச்சேரி சின்னவீராம்பட்டினத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தனியார் விடுதியில் தங்கியுள்ள 18 எம்.எல்.ஏக்களும் இதுவரை வெளியே வரவில்லை. அங்கேயே உணவு உண்டு, நடைபயிற்சி மேற்கொண்டு தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர். இதற்கிடையே புதுச்சேரியைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஓம்சக்தி சேகர், இபிஎஸ் ஆதரவாளர் புருஷோத்தமன் தரப்பைச் சேர்ந்த 60-க்கு மேற்பட்டோர் இன்று தனியார் சொகுசு விடுதி முன்பு குவிந்தனர்.

உள்ளே தங்கியுள்ள எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்களுடன் வந்து இணைய வேண்டும் என கோஷமிட்டனர். சசிகலா மற்றும் தினகரனுக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள் திடீரென தினகரன் கொடும்பாவியை எரித்தனர். பின்னர் விடுதிக்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீஸார் தடுப்புகளை வைத்து போராட்டக்காரர்களை தடுத்ததால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் கூறியதாவது:
தினகரன், சசிகலாவுடன் சென்றால் சிறை நிச்சயம். நிரந்தர பொதுச்செயலர் ஜெயலலிதாதான்.  அதை நினைத்து திரும்பி வர வேண்டும். பணம் கொடுத்துதான் எம்.எல்.ஏக்களை தினகரன் அழைத்து வந்து அடைத்து வைத்துள்ளார். பணம் வாங்கி தான் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ளனர். அது எவ்வகையில் வாங்கினார்கள் என தெரியாது. எம்.எல்.ஏ.க்கள் விலை போகக்கூடாது. எம்எல்ஏக்களிடம் பேசினேன். அவர்கள் விரைவில் இங்கு வருவதாக தெரிவித்தனர். எங்களுக்கு எம்.எல்.ஏக்கள் எவரும் எதிரிகள் இல்லை.

அதிமுகவை பிளவுப்படுத்த காங்கிரஸ் அரசு நினைக்கிறது. அதனால் மவுனம் காக்கிறது. எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று ஆட்சியர், ஐஜி ஆகியோரிடம் மனு தர உள்ளேன்.

தினகரன் வந்தால் எங்கள் நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com