அதிமுக (அம்மா) பொறுப்புகளில் இருந்து அமைச்சர்கள் 4 பேர் நீக்கம்

அதிமுக அம்மா அணி பொறுப்புகளில் இருந்து அமைச்சர்கள் சிலர் நீக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அதிமுக (அம்மா) பொறுப்புகளில் இருந்து அமைச்சர்கள் 4 பேர் நீக்கம்

அதிமுக அம்மா அணி பொறுப்புகளில் இருந்து அமைச்சர்கள் சிலர் நீக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அவரது ஆதரவாளர்கள் புதிய நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் எம்.ரங்கசாமி, தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளராக மா.சேகரும், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இ.மகேந்திரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலுள்ள வி.வி.ராஜன் செல்லப்பா அப்பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்.
அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள சுதா கே.பரமசிவன் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். கட்சியின் புதிய அமைப்புச் செயலாளர்களாக திருவான்மியூர் எஸ்.முருகன், குடவாசல் எம்.ராஜேந்திரன், கல்லூர் இ.வேலாயுதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ள சிறுணியம் பி.பலராமன் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, புதிய செயலாளர் பொறுப்பில் டி.ஏ.ஏழுமலை (பூந்தமல்லி எம்.எல்.ஏ.) நியமிக்கப்படுகிறார்.
காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளர் பொறுப்பிலுள்ள எஸ்.ஆறுமுகம் அதிலிருந்து நீக்கப்பட்டு, புதிய செயலாளராக எம்.கோதண்டபாணி (திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ.) நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விருகை வி.என்.ரவி நீக்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டச் செயலாளரும், விவசாயப் பிரிவுச் செயலாளருமான பி.கே.வைரமுத்து அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, புதிய செயலாளராக பரணி இ.ஏ.கார்த்திகேயன் நியமிக்கப்படுகிறார்.
கட்சியின் விவசாயப் பிரிவுச் செயலாளராக துரை கோவிந்தராஜன் செயல்படுவார்.
கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம்: அதிமுக அம்மா பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.பி.உதயகுமார் (வருவாய்த் துறை அமைச்சர்) அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். மானாமதுரை எம்.எல்.ஏ. எஸ்.மாரியப்பன் கென்னடி, அம்மா பேரவைச் செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்.
திருவாரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ள ஆர்.காமராஜ் (உணவுத் துறை அமைச்சர்) அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். திருவாரூர் மாவட்டச் செயலாளராக எஸ்.காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் (போக்குவரத்துத் துறை அமைச்சர்) நீக்கப்பட்டு, முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாளருமான வி.செந்தில் பாலாஜி புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.சி.வீரமணி (வணிகவரிகள் துறை அமைச்சர்), அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு புதிய செயலாளராக ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.பாலசுப்பிரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் புதிய பொறுப்புகள் கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறது.
அமைச்சர்கள் எதிர்ப்பு
அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதற்கு, அமைச்சர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, ஆர்.காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நீக்கப்பட்டதாக அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அவரது இந்த அறிவிப்புக்கு அமைச்சர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தங்களை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை; டிடிவி தினகரனின் நியமனமே செல்லாது; எனவே, அவரது நீக்கத்தை ஏற்கப் போவதில்லை என்று தெரிவித்தனர்.
மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com