கட்சியையும், ஆட்சியையும் யாராலும் அசைக்க முடியாது: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களின் ஆன்மா எங்களுடன் உள்ளவரை கட்சியையும், ஆட்சியையும் யாராலும் அசைக்க முடியாது என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் மாலை அணிவிக்கும் அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், அதிமுக நிர்வாகிகள்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் மாலை அணிவிக்கும் அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், அதிமுக நிர்வாகிகள்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களின் ஆன்மா எங்களுடன் உள்ளவரை கட்சியையும், ஆட்சியையும் யாராலும் அசைக்க முடியாது என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
அரியலூர் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அவர் மேலும் பேசியது:
பல்வேறு இன்னல்களையும், பிரச்னைகளையும் தாண்டி மூன்று முறை முதல்வராக இருந்தவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.
ஏழை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் அவர். அவரது வழியில் வந்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் திட்டங்களை செவ்வனே செயல்படுத்தி வந்தார். இந்த இரு தலைவர்களும் தமிழகத்துக்கு இறைவன் கொடுத்த வரம்.
திரைத்துறையில் ஆற்றிய பணிகள்தான் எம்.ஜி.ஆரை புகழின் உச்சத்துக்கு கொண்டு சென்றன. அவர் மக்களுக்காக தொடர்ந்து சுயநலமின்றி உழைத்து, அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்று நீங்கா இடம் பிடித்தார்.
எம்.ஜி.ஆரைப் போல ஆக நினைப்பவர்கள் மக்களுக்காக உழைத்து, தியாகங்களைச் செய்து மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கேற்று அவர்களின் மனதில் இடம் பெற வேண்டும். எம்.ஜி.ஆர் வழியில் வந்த ஜெயலலிதா தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினார்.
அவர் வழியில் வந்த இந்த அரசும் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ள வசதியாக குடிமராமத்து திட்டம் தொடங்கப்பட்டு, இதில் முதல்கட்டமாக ரூ. 100 கோடி மதிப்பீட்டில் விவசாயிகள் பங்களிப்புடன் 1,519 ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கு அந்த மண்ணை இலவசமாக வழங்கும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இரண்டாம் கட்டமாக 2,065 ஏரி, குளங்கள் குடிமராமத்து பணிகள் மூலம் தூர்வார ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியிலும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மணல் தட்டுப்பாட்டை போக்க அரசே மணல் குவாரியை எடுத்து நடத்தி வருகிறது.
நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 260 பணிகள் மேற்கொள்ளப்பட்டு நீர்நிலைகளில் நீர் தேங்கி, நிலத்தடி நீர் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3 ஆண்டுகளில் ரூ.1,000 கோடியில் தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2017-18 ஆண்டில் முதல் கட்டமாக ரூ.350 கோடியில் 100 தடுப்பணைகள் கட்டப்படவுள்ளன. இதன்மூலம் நிலத்தடி நீர் உயர வழிவகை செய்யப்படவுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவை போராடி பெற்றுத் தருவோம். தமிழகத்தில் 140 ஆண்டுகள் இல்லாத வறட்சி நிலவி வந்தாலும், குடிநீர் பிரச்னைக்காக தேவையானத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறோம். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2,455 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், காப்பீட்டுத் தொகையை அதிகமாக பெற்றுத் தரும் அரசாக இந்த அதிமுக அரசு செயல்படுகிறது.
மற்ற துறைகளை காட்டிலும் இந்த அரசு கல்வித்துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. நாட்டிலேயே பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி வழங்கி கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த அரசு. மடிக்கணினி வழங்கும் திட்டம் மூலம் தமிழகம் விஞ்ஞான பூமியாக உருவாகியுள்ளது. இதனால் இந்த ஆட்சியில் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை 44.3 சதவீதம்அதிகரித்துள்ளது. கல்வித்துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தையும், அவரது வழியில் வந்த நாங்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.
ஆட்சிக்கும் கட்சிக்கும் சிலர் துரோகம் செய்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களின் ஆன்மா எங்களுடன் உள்ளவரை கட்சியையும், ஆட்சியையும் எவராலும் அசைக்க முடியாது. மக்கள் மனதிலிருந்து அகற்றவும் முடியாது என்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்றுவோம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
அதிமுக ஆட்சியையும், கட்சியையும் உயிரை கொடுத்தாவது காப்பாற்றுவோம் என்றார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
அரியலூரில் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அவர் மேலும் பேசியது:
சிறப்பு மிக்க இந்த விழாவில் உங்களை சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கி தந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. இந்த விழாவில், என்னுடைய உரை இல்லை என நினைத்திருந்த நேரத்தில் உரை நிகழ்த்த வாய்ப்பை உருவாக்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர். எந்த நோக்கத்துக்காக அதிமுகவை உருவாக்கினாரோ, அந்த நோக்கத்தை ஜெயலலிதா நிறைவேற்றி வந்தார். நாடு போற்றும் நல்லாட்சியை அளித்து வந்தார். இரு தலைவர்களின் வழியில் தற்போது நல்லாட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. 1,000 ஆண்டுகள் ஆனாலும் இந்த ஆட்சியையும், கட்சியையும் யாராலும் அசைக்க முடியாது. அதிமுக ஆட்சி, கட்சியை நமது உயிரை கொடுத்தாவது காப்பாற்றுவோம் என சபதம் எடுப்போம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com