ரயில் விபத்துகள் எதிரொலி: பாதுகாப்புப் பணியில் புதிதாக 2 லட்சம் பேரை நியமிக்கத் திட்டம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அண்மையில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு ரயில் விபத்துகளின் எதிரொலியாக, ரயில்வே வாரியத்தின் தலைவர் ஏ.கே.மிட்டல் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அண்மையில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரு ரயில் விபத்துகளின் எதிரொலியாக, ரயில்வே வாரியத்தின் தலைவர் ஏ.கே.மிட்டல் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார். ரயில்வே அமைச்சரான சுரேஷ் பிரபுவும் பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளார். இது ரயில்வே அமைச்சக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், உண்மையிலேயே கடந்த மூன்று ஆண்டுகளில், தேசிய அளவில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளன. மேலும், ரயில் விபத்துகளை முற்றிலும் தடுக்கும் நோக்கில், இதுதொடர்பான பாதுகாப்புப் பணியில் மேலும் 2 லட்சம் பேரை புதிதாக நியமிக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
உண்மை நிலை: புதிய ரயில்வே அமைச்சகம் பொறுப்பேற்ற பின்பு, கடந்த 3 ஆண்டுகளில், அதாவது 2014 - 15 ஆம் ஆண்டில் 135 ரயில் விபத்துக்கள் நிகழ்ந்தன. இதுவே, 2015 -16 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 107 ஆக குறைந்து, 2016- 17ஆம் ஆண்டில் சற்றே குறைந்து தற்போது வரை 104 விபத்துகள் நடந்துள்ளன.
பாதுகாப்பில் கவனக் குறைவா?: 2014 -ஆம் ஆண்டு புதிய ரயில்வே அமைச்சகம் பதவியேற்றபோது, 60 சதவீத உயிரிழப்புகள் ஆளில்லாத லெவல் கிராசிங்குகளில் நடைபெறுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையாக வைத்து 2019 -ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஆளில்லாத லெவல் கிராசிங்குகளையும் நீக்க முடிவெடுக்கப்பட்டது. தற்போது கடந்த மூன்றாண்டுகளில் ஆளில்லாத லெவல் கிராசிங்குகளில் நடக்கும் விபத்துக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது கணிசமாக குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கட்டுமானத்தில் கவனக் குறைவு: பெரும்பாலான ரயில் விபத்துகள் கட்டுமானத்தில் ஏற்படும் கவனக்குறைவால் ஏற்படுவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கட்டுமானப் பணிகளுக்கு அதிக அளவில் ஆண்டுக்கு ரூ. 54,031 கோடி முதலீடு செய்யப்படுகிறது.
ரயில் பாதைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் பாதுகாப்புப் பணிகளில் தொய்வை ஏற்படுத்துகிறது. இந்தாண்டின் இறுதிக்குள் கட்டுமானப் பணிகளுக்காக ரூ. 4 லட்சம் கோடி செலவிட ரயில்வே அமைச்சகம் முடிவு மேற்கொண்டுள்ளது.
பழைய பெட்டிகள் இனி இல்லை: தற்போது பயன்பாட்டில் உள்ள ரயில் பெட்டிகளின் உற்பத்தி 2015 -16 ஆம் ஆண்டு முதல் நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இதுவும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் துருப்பிடிக்காத, தீப்பிடிக்காத வகையில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ரயில் பெட்டிகளை ஐ.சி.எப். தயாரித்து வழங்கும்.
பணியிடங்கள் காலியாக உள்ளதா?: இதுகுறித்து தெற்கு ரயில்வே தலைமை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களின் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இவை விபத்துகள் அதிகரிக்க காரணமாக உள்ளது' என்று தவறான தகவல்கள் வெளியே பரப்பப்படுகின்றன. ஆனால், 2009-10லிருந்து 2013-14 ஆம் ஆண்டு வரை, பாதுகாப்புப் பணி ஊழியர்களின் நிரப்பப்படாத காலியிடங்களின் எண்ணிக்கை , அனுமதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 18.65 சதவீதமாக இருந்தது. இது 2014 -17ஆம் ஆண்டுகளில் 16.86 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது பாதுகாப்புப் பணிகளுக்காக 37,510 ஆட்கள் புதிதாக பணியமர்த்தப்பட்டு ஏப்ரல் 1 -ஆம் தேதி நிலவரப்படி, மொத்த பாதுகாப்புப் பணியாளர்களின் எண்ணிக்கை 6,35,940 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிகளுக்காக மேலும் 2 லட்சம் பேர் பணி அமர்த்தப்பட உள்ளனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com