வத்தல்மலை சுற்றுலாத் தலமாகுமா?

வத்தல்மலை சுற்றுலாத் தலமாகுமா?தருமபுரி: தருமபுரி மாவட்டத்தின் குட்டி கொடைக்கானல் என்றழைக்கப்படும் வத்தல் மலையில், ஏற்கெனவே அறிவித்தபடி சூழலியல் பூங்கா உள்ளிட்ட
வத்தல்மலை சுற்றுலாத் தலமாகுமா?

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தின் குட்டி கொடைக்கானல் என்றழைக்கப்படும் வத்தல் மலையில், ஏற்கெனவே அறிவித்தபடி சூழலியல் பூங்கா உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றி சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என மலைக் கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தருமபுரி நகரிலிருந்து கிழக்குப் புறமாகப் பார்த்தால் ஓர் அரணைப் போல படர்ந்திருக்கும் மலைப் பகுதி வத்தல் மலை. நகரிலிருந்து மொத்தமாக 25 கி.மீ. தொலைவும், அடிவாரத்திலிருந்து 16 கி.மீ வனத் துறையின் மலைச்சாலையையும் கொண்டது. 23 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மழைக்காலத்தில் அடிக்கடி சரிவுகளைக் காணும் ஓரிரு வளைவுகள் இன்னமும் அப்படியே உள்ளன.

கடல் மட்டத்திலிருந்து 1100 அடி உயரமான மலைமேல் சிறியதும் பெரியதுமாக 11 கிராமங்கள் உள்ளன. இவற்றில் பெரியூர், பால்சிலம்பு, சின்னாங்காடு, நாய்க்கனூர் ஆகியவை பெரிய ஊர்கள். மொத்தமாக 1300 குடும்பங்கள் உள்ளன. மலையிலிருந்து கிழக்குப் பகுதியில் பொம்மிடிக்கு இறங்க மண் சாலை உள்ளது. தார்ச்சாலை அமைப்பதற்கான திட்டம் தயாராக இருந்தபோதும், மரங்களை அகற்ற வேண்டியிருப்பதால் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்காக நிலுவையில் இருக்கிறது.

மலையாளிகள் என்ற தமிழ் பேசும் பழங்குடி மக்கள் பூர்வீகமாக வசிக்கிறார்கள். கேழ்வரகு, சாமை, திணை போன்றவை பாரம்பரிய விவசாய விளை பொருள்கள். தற்போது அண்மைக்காலமாக மிளகு, பலா, காபி பயிர்களும் வத்தல்மலையை ஆக்கிரமித்துள்ளன.

பெரியூரில் வனத் துறையினரின் தங்கும் விடுதி உள்ளது. போக்குவரத்து முறைப்படுத்தப்படாததால், இந்த விடுதியைப் பொதுப் பயன்பாட்டுக்கு இன்னும் கொண்டு வரவில்லை. இந்த விடுதிக்கு அருகேயே சுற்றிலும் ஓங்கி உயர்ந்த மரங்களுடன் கூடிய சிறிய குளம் ஒன்றும், பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள உயர்நிலைப் பள்ளிக் கட்டடமும் உள்ளன.

நகரப் பகுதி மற்றும் பொம்மிடிப் பகுதி அடிவாரங்கள் வரை 6311 ஹெக்டேர் பரப்பளவு வனத் துறையின் கட்டுப்பாட்டில் மட்டும் உள்ளது. இவையன்றி, ஊர்ப் பகுதிகள், விவசாய நிலங்கள் தவிர்த்து வருவாய்த் துறைப் புறம்போக்கு நிலமும் உள்ளன.

இதில் வருவாய்த் துறைப் புறம்போக்கில் 87.67 ஏக்கர் பரப்பளவில் தோட்டக் கலைத் துறையினரின் சூழலியல் பூங்கா அமைப்பதற்கான திட்டம் 2012}ல் அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ. 18 கோடியும் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நிலம் கையகப்படுத்தும் பணிகள் கூட நடைபெறவில்லை.
தாவரவியல் பூங்கா உள்ளிட்டவற்றை அமைப்பதற்கான தேவைக்கும் அதிகமான சமதளப் பரப்பும், ஆங்காங்கே ஏராளமான சிறு சிறு குளங்களும் உள்ளன.

பெரியூரில் இருந்து தருமபுரி நகரைப் பார்க்கும் வகையிலும், நாய்க்கனூர் பகுதியில் பொம்மிடி நகரைப் பார்க்கும் வகையிலும் காட்சி முனைகள் அமைக்கத்தக்க அருமையான} இயற்கையான வசதி கொண்ட பகுதிகள் உள்ளன.

பெரியூரில் ஒரு தொடக்கப் பள்ளியும், பாலம் சிலம்பில் ஒரு நடுநிலைப் பள்ளியும், சின்னாங்காட்டில் ஒரு தொடக்கப் பள்ளியும் உள்ளன. சிற்சில இடங்களில் முறையான சாலையும் இல்லை.

ஒகேனக்கல் மட்டுமே தருமபுரியின் சுற்றுலாத்தலம் என்று பலராலும் கருதப்பட்டு வந்த நிலையில், இன்னமும் பசுமை மாறாமல் எழில் கொஞ்சும் இடமாக வத்தல் மலை அமைந்துள்ளது கவனிக்க வேண்டிய ஒன்று.

தமிழக அரசு வத்தல் மலையை அனைத்து வசதிகளுடன் கூடிய சுற்றுலாத் தலமாக மாற்றினால், மெல்ல வருவாய்க் குன்றி வரும் விவசாயத்திலிருந்து அடுத்த நிலைக்கு தங்களின் வாழ்நிலையைக் கொண்டு செல்லும் என மலைவாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களின் மக்களும் கூட முழுமையாக இயற்கையை ரசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
 

கூடுதல் படி கிடையாது...

வத்தல்மலையில் 4 அரசுப் பள்ளிகள் மற்றும் அரசுத் துறை சார்ந்த சிறிய அலுவலகங்கள் அமைந்திருப்பதால், ஏறத்தாழ 50 பேர் இங்கு பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மலைப் பகுதியில் பணியாற்றுவதற்கான கூடுதல் படி எதுவும் வழங்கப்படவில்லை.

காரணம், தருமபுரி மாவட்டத்தைப் பொருத்தவரை சித்தேரி மற்றும் சிட்லிங் பகுதிகள் மட்டுமே மலைப்பகுதிகளாக அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளன. வத்தல்மலை கவனிக்கப்படாமல் இருப்பதை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


அதிக கட்டணம்

பல ஆண்டுகள் ஆன பிறகும் பேருந்துப் போக்குவரத்து இதுவரை வத்தல் மலைக்குக் கிடையாது. இதனால், மலை மேல் வாகனங்கள் வைத்துள்ளோர், பொருட்கள் வாங்குவதற்காக மக்களை அழைத்துச் செல்ல ஒரு முறைக்கு ரூ. 50 வரை கட்டணமாக வாங்குகின்றனர். பெரிய விவசாயிகள் தங்களது விளை பொருட்களை உரிய வியாபாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர் என்றாலும், சிறிய விவசாயிகள் தலைச்சுமையாக எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம் என நினைக்கும் போது இந்தக் கட்டணம் பெரும் சுமையாக விளை பொருட்களின் மீது வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அதற்கான வாய்ப்பு இல்லாவிட்டால், விவசாயத்தைக் கைவிடும் மனநிலையும் உருவாகும். எனவே, சிற்றுந்து போக்குவரத்தை சுற்றுலாத் திட்டத்தோடு இணைத்தே கொண்டு வர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com