இரட்டை இலையை மீட்க முதல்வர், துணை முதல்வர் தில்லி பயணம்

தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களை திரும்பப் பெற, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர்
இரட்டை இலையை மீட்க முதல்வர், துணை முதல்வர் தில்லி பயணம்

சென்னை: தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களை திரும்பப் பெற, முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று செவ்வாய்கிழமை (ஆக 29) தில்லி செல்ல ஆயத்தமாகி உள்ளனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தலில், அத்தொகுதியில் ஆளும் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மதுசூதனன் விருப்பம் தெரிவித்தார். இதேபோல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கம் வகிக்கும் சசிகலா அணியைச் சேர்ந்த டி.டி.வி.தினகரனும் அத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, இந்த இரு அணியினரும் அதிமுக என்ற பெயரையும், அக்கட்சியின் "இரட்டை இலை' தேர்தல் சின்னத்தையும் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறியது. மேலும், இரு தரப்பும் கட்சித் தலைமைக்கு உரிமை கோரும் ஆவணங்களை ஜூன் 16-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று இரு தரப்புக்கும் ஆணையம் உத்தரவிட்டது.

இதன்படி பன்னீர்செல்வம் தலைமையை ஆதரித்து லட்சக்கணக்கான அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கையெழுத்திட்ட பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஜூன் 16 ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 3,84,000 பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு போட்டியாக சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் அங்கம் வகிக்கும் அணியைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி அணி சார்பில் 6,82,805 பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக தினகரனும் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தப் பிரமாண பத்திரங்கள் ஒவ்வொன்றிலும், மாவட்ட வாரியாக அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் சுமார் 500 முதல் ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

டாக்டர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் 52,000 பிரமாண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் செய்யப்பட்டன. இந்த பிரமாண பத்திரம் ஒவ்வொன்றும் ரூ.20 மதிப்புடையது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களை எந்த அடிப்படையில் ஆராய்வது என்ற குழப்பம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டது.

இரு தரப்பும் லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளதால், அவற்றை சரிபார்க்க குழுக்களை அமைப்பதா அல்லது வேறு உத்திகளை கையாளுவதா என்பது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் குழப்பத்தில் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் புதன்கிழமை (ஆக 23) இரு அணிகளும் இணைந்தன. இதையடுத்து சென்னை அதிமுக (அம்மா, புரட்சித் தலைவி அம்மா) தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கள்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் சட்ட திட்ட விதிகள் படி, அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் செப்டம்பர் 12-இல் அதிமுக பொதுக் குழு, செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதையடுத்து தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரங்களை திரும்பப் பெறுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று தில்லி செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com