அரசின் பெரும்பான்மை விவகாரம்: குடியரசுத் தலைவருடன் 5 கட்சி எம்.பி.க்கள் நாளை சந்திப்பு

அரசின் பெரும்பான்மை விவகாரம்: குடியரசுத் தலைவருடன் 5 கட்சி எம்.பி.க்கள் நாளை சந்திப்பு

பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆளுநர் உத்தரவிடாத நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை வியாழக்கிழமை (ஆக.31) 5 கட்சி

பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆளுநர் உத்தரவிடாத நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை வியாழக்கிழமை (ஆக.31) 5 கட்சி எம்.பி.க்கள் சந்தித்து முறையிட உள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் 19 பேர் திரும்பப் பெற்றனர். இதனால், பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவைக் காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கடிதம் எழுதினர்.
ஆளுநரைக் கடந்த ஆக. 27-ஆம் தேதி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையில் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கு ஆளுநர் தரப்பில் இருந்து எவ்வித பதிலும் வராத நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை வியாழக்கிழமை (ஆக.31) சந்தித்து முறையிட திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
கேள்வி: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரைச் சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று கடிதம் கொடுத்து நீண்ட நாள்களாகியும் இதுவரை நடவடிக்கை இல்லை. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
பதில்: திமுக மட்டுமல்லாமல் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இதுகுறித்து முறையிட இந்திய குடியரசுத் தலைவரிடம் நேரம் கேட்டிருந்தோம். வியாழக்கிழமை (ஆக.31) நேரம் ஒதுக்கித் தருவதாக செய்தி வந்துள்ளது. ஆனால், சந்திப்புக்கான நேரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரச்னைகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் முறையிடுவர்.
கேள்வி: உரிமை மீறல் குழு அனுப்பியுள்ள நோட்டீசுக்கு விளக்கம் அளிப்பீர்களா அல்லது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளீர்களா?
பதில்: சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் குட்காவைக் காண்பித்தது உண்மை. ஆனால், அதன் மீது இவ்வளவு நாள்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு, இப்போது 40 நாள்கள் கழித்து நடவடிக்கை எடுக்கப் பார்க்கின்றனர். அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எனக் கருதுகிறேன். இன்றைக்கும் கூட குட்கா விற்பனை நடைபெறுவதாகச் செய்திகள் வருகின்றன. இந்த விவகாரம் குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com