இரட்டை இலை: எங்கள் கருத்தையும் கேட்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் தினகரன் அணியினர் மனு

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக முடிவு எடுக்கும் போது பிரதிவாதிகளான தங்களது கருத்துகளையும் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் டி.டி.வி. தினகரன்
இரட்டை இலை: எங்கள் கருத்தையும் கேட்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் தினகரன் அணியினர் மனு

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக முடிவு எடுக்கும் போது பிரதிவாதிகளான தங்களது கருத்துகளையும் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் டி.டி.வி. தினகரன் ஆதரவு அணியினர் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
இரட்டை இலைச் சின்னம் பெறும் விவகாரத்தில் அதிமுக எனும் கட்சிப் பெயரையும், அதன் தேர்தல் சின்னமான இரட்டை இலையையும் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பயன்படுத்தக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. மேலும், பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வரை அதிமுக இரு அணிகளாக செயல்படவும் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியும், சசிகலா தலைமையில் அதிமுக (அம்மா) அணியும் செயல்பட்டு வந்தன. சின்னத்திற்கு உரிமை கோருவது தொடர்பாக இரண்டு தரப்பினரின் சார்பில் லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இவை தவிர, டாக்டர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் அமைப்பாளர் தீபாவின் சார்பிலும் அதிமுகவுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், பிரிந்திருந்த இரு அணிகளும் இணைந்துவிட்டதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்தனர். இதற்கிடையே, இரு அணியினரும் தேர்தல் ஆணையத்தை அணுகி தாங்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களைத் திரும்பப் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து, டி.டி.வி. தினகரன் தலைமையிலான சசிகலா ஆதரவு அணியைச் சேர்ந்த கர்நாடக மாநில அதிமுக செயலர் வி.புகழேந்தி, மாநிலங்களவை முன்னாள் அதிமுக உறுப்பினர் எஸ்.அன்பழகன் மற்றும் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை புது தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர்.
பின்னர், இதுகுறித்து செய்தியாளர்களிடம் வி.புகழேந்தி கூறியதாவது:
அதிமுக விவகாரத்தில் பிரதிவாதிகளான சசிகலா அணியின் தரப்புக்குத் தெரியாமல் எதிர்த்தரப்பினர் அளிக்கும் மனுக்கள் மீது முடிவு எடுக்கும் முன்பாக எங்களது கருத்துகளையும் கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளோம். கட்சியின் புதிய நிர்வாகிகள் குறித்த பட்டியலும் தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் செயல்படாத நிலையில், அவரது ஆணைக்கு ஏற்ப துணைப் பொதுச் செயலாளர் செயல்பட்டு புதிய நிர்வாகிகளை நியமனத்தை செய்யலாம் என கட்சியின் விதி கூறுகிறது. அதன்படியே டிடிவி தினகரன் செயல்பட்டு வருகிறார். அதிமுக அம்மா அணியின் லெட்டர் பேடை முதல்வர் எடப்பாடி அணியினர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தேர்தல் ஆணையத்தை தவறாகத் திசை திருப்பக் கூடும் என்பதால், இந்த விஷயத்தை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு முன்கூட்டியே கொண்டு வந்துள்ளோம்.
கட்சியின் பொதுக் குழுவைக் கூட்டும் அதிகாரம் கட்சியின் பொதுச் செயலருக்கு மட்டுமே உண்டு. இதனால், செப்டம்பர் 12-ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டப் போவதாக அறிவிப்பதற்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு அதிகாரம் கிடையாது. டிடிவி தினகரனுக்கு நாளுக்கு நாள் எம்எல்ஏக்கள் ஆதரவு அதிகரித்து வருகின்றன என்றார் புகழேந்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com