கிருஷ்ணகிரி உட்பட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடி வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணை நிரம்பியதைத் தொடர்ந்து, தமிழக பொதுப்பணித்துறை
கிருஷ்ணகிரி உட்பட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடி வருவதால் ஓசூர் கெலவரப்பள்ளி அணை நிரம்பியதைத் தொடர்ந்து, தமிழக பொதுப்பணித்துறை கிருஷ்ணகிரி உட்பட தென்பெண்ணை ஆற்றின் 5 கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில தினங்களாக கர்நாடக மாநிலம், பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கேஆர்பி அணை மற்றும் தென்பெண்ணை ஆற்றில் உள்ள ஒசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.

ஒசூர் கெலவரப்பள்ளி அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 44.2 அடியாகும். தற்போதைய நீர்மட்டம் 44 அடியாகும். ஒசூர் கெலவரப்பள்ளி அணை நிரம்பியதன் காரணமாக, அணைக்கு வரக்கூடிய அனைத்து நீரும் அப்படியே திறந்து விடப்படுகிறது.

அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்புக் கருதி, அணைக்கு வந்த 2 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கக் கூடிய பூதிநத்தம், பேரண்டப்பள்ளி, கோபசந்திரம், ஆழியாளம், குக்கலப்பள்ளி, நாயக்கனப்பள்ளி, முத்தாலி, போடூர், குக்கலப்பள்ளி, பாத்தகோட்டா உள்பட 20 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கண்ட கிராமம் மற்றும் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும்  யாரும் தென்பெண்ணை ஆற்றுக் கரையோரத்தில் செல்ல வேண்டாம். மேலும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், யாரும் தரைமட்டப் பாலத்தை கடக்க வேண்டாம் எனவும் பொதுப்பணி துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தென்பெண்ணை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், சூளகிரியைச் சுற்றி தென்பெண்ணை ஆற்றில் உள்ள தரைமட்டப் பாலங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com