டிசம்பர் 2015 வெள்ளம்: அனுபவம் பாடமாகுமா? மீண்டும் ஒரு அனுபவமே நேரிடுமா?

கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்சென்னைப் பகுதியைப் புரட்டிப்போட்ட கடும் வெள்ளம் சென்னைவாசிகளுக்கு மிக மோசமான அனுபவமாக அமைந்தது.
டிசம்பர் 2015 வெள்ளம்: அனுபவம் பாடமாகுமா? மீண்டும் ஒரு அனுபவமே நேரிடுமா?


சென்னை: கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்சென்னைப் பகுதியைப் புரட்டிப்போட்ட கடும் வெள்ளம் சென்னைவாசிகளுக்கு மிக மோசமான அனுபவமாக அமைந்தது.

மிகவும் புகழ்பெற்ற பழைய மகாபலிபுரம் சாலை (ஓஎம்ஆர்), எதிர்காலத்தில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதி, 2015ம் ஆண்டில் ஒரு வார காலத்துக்கும் மேலாக வெள்ளத்தில் மிதந்தது. திருவான்மியூர் முதல் சோழிங்கநல்லூர் வரை முழங்கால் வரை தண்ணீர் நின்றிருந்ததும் யாராலும் மறக்க முடியாதது.

இதுபோன்றதொரு வெள்ளத்தைப் பார்த்ததேயில்லை என்று சொல்லும் அளவுக்கு வெள்ளம் ஏற்படக் காரணமே 10 முதல் 15 கி.மீ. தூரத்துக்கு பக்கிங்காம் கால்வாயை தூர்வாராததே என்பதுதான் பெரும் துயரம்.

சரி.. இவ்வளவு மோசமான அனுபவத்தை, அரசு ஒரு பாடமாக எடுத்துக் கொண்டுள்ளதா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கிறது. 

அதாவது, இந்த ஆண்டும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சொல்லப்போனால் இன்னும் மோசமாகவே மாறியுள்ளது. கோவளம் கடற்கரை முகத்துவாரப்பகுதி டன் கணக்கில் கழிவுகளால் மூடப்பட்டுள்ளது.

மழை பெய்தால் வெள்ள நீர் தாம்பரம் மற்றும் சேலையூரில் இருந்து ஆதம்பாக்கம் வழியாக வேளச்சேரியை அடையும். வேளச்சேரியில் இருந்து இந்த வெள்ள நீர் வெளியேற ஒரே ஒரு வழிதான் உள்ளது அதுதான் பள்ளிக்கரணை. அங்கிருந்துதான் ஒக்கியம் மடுவு கால்வாய்கள் வழியாக வெளியேறி ஓஎம்ஆர்-ல் இருந்து பக்கிங்காம் கால்வாய் வழியாக சோழிங்கநல்லூரில் கடலில் கலக்க வாய்ப்பு உள்ளது. 

ஒக்கியம் மடுவு கால்வாய் - சோழிங்கநல்லூர் முதல் கோவளம் வரையிலான சந்திப்புப் பகுதி மிகப் பரந்த அதாவது 100 மீட்டர் அகலம் கொண்டது. ஆனால், கடற்கரையை அடையும் முகத்துவாரத்தின் பரப்பு 220 மீட்டரில் இருந்து தற்போது 40 மீட்டராக சுருங்கிவிட்டது.

இந்த முகத்துவாரப் பகுதியும் கடற்கரையின் ஒரு பகுதியாக மாறி சுற்றுலாப் பயணிகள் கூடாரம் அமைத்து தங்கும் இடமாகவும் மாறிவிட்டது.

அதே சமயம், கடல் அரிப்பு போன்றவற்றை தடுக்கும் கட்டமைப்புகளையும், மீனவத் துறை இப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் திறந்தபகுதியாக இருக்க வேண்டிய முகத்துவாரத்தில், அடிப்படை திட்டமிடல் இல்லாமல், அரசும் ரூ.18.30 கோடி செலவில் கட்டமைப்புகளை ஏற்படுத்தி, நிலைமையை இன்னும் சிக்கலாக்கியுள்ளது.

கோவளம் முகத்துவாரத்தில் ஏற்பட்ட இந்த வரம்புமீறல்களால், தென் சென்னையின் வாழ்விடப் பகுதிகள் முழுவதுமே ஆபத்தான பகுதிகளாக மாறியுள்ளது என்கிறார் கடல்வள மையத்தைச் சேர்ந்த நித்யானந்த் ஜெயராமன்.

எண்ணூர் துறைமுகத்தில் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் மாசு குறித்து ஆராய அமைக்கப்பட்டிருக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள ஐஐடி சென்னை பேராசிரியர் பாலாஜி நரசிம்மனிடம் இது குறித்து கருத்துக் கேட்டதற்கு, கோவளம் கடற்கரைப் பகுதியை தான் பார்க்கவில்லை. எனவே அது பற்றி தன்னால் கருத்துக் கூறு முடியாது. ஆனால், கடந்த 2015ம் ஆண்டு வெள்ளதுக்கு அடையாறு ஆறும் மிக முக்கியக் காரணமாக அமைந்தது என்றார்.

இது குறித்து நமது எக்ஸ்பிரஸ் குழு பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு,  வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள தயாராகி வருவதாக பதில் கிடைத்துள்ளது.

எச்சரிக்கைச் செய்தி

கோவளம் கடற்கரையின் முகத்துவாரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள கடல் அரிப்புத் தடுப்பு கட்டமைப்பு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும். இதுபோன்ற கட்டமைப்பினால்தான் முட்டுக்காடு பகுதியில் ஓராண்டுக்கும் குறைவான காலக்கட்டத்திலேயே 400 மீட்டர் தூரத்துக்கான கடற்கரைப் பகுதிகள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இவற்றால், இயற்கையாக மணல் பகுதியின் அசைவுகளும் பாதிக்கப்படும். இதனால்தான் முகத்துவாரப் பகுதி மூடப்படுகிறது. 

சென்னையில் ஏற்படும் வெள்ள நீரை வடிக்கும் முக்கியப் பகுதியாக பக்கிங்காம் கால்வாய்தான் அமைந்திருப்பதால், அந்தப் பகுதியை தூர்வாறி சுத்தப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இயற்கையாக கன மழை பெய்து அதனால் ஏற்படும் வெள்ளத்தைக் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தடுக்க முடியும் போது, நடவடிக்கை எடுக்காமல் செயற்கை வெள்ளம் ஏற்பட விட்டுவிட்டால் இத்தனை தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து பயன்தான் என்ன?

கால்வாய்களை தூர்வாரி, மழை நீர் வடிகால்களை சுத்தப்படுத்தத் தவறிடின், கோவளம் பகுதியைச் சுற்றியிருக்கும் பகுதிகளுக்கு வெள்ள அபாயம் அதிகமாக இருப்பதை மறுக்க முடியாது.

ஏற்கனவே கிடைத்த அனுபவங்களை பாடமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கும் நிலையில், நடக்கும் நிகழ்வுகள் மேலும் சில அனுபவங்களை ஏற்படுத்துமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com