அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதில் பொதுமக்களுக்கு என்ன தயக்கம்? 

தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தை வாகனம் ஓட்டும்போது வைத்திருப்பது கட்டாயம் என்ற உத்தரவுக்கு பொதுமக்களிடையே தயக்கம் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதில் பொதுமக்களுக்கு என்ன தயக்கம்? 

சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தை வாகனம் ஓட்டும்போது வைத்திருப்பது கட்டாயம் என்ற உத்தரவுக்கு பொதுமக்களிடையே தயக்கம் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

அரசின் இந்த உத்தரவு காரணமாக அசல் ஓட்டுநர் உரிமம் தொலைந்தவர்கள், நகல் உரிமத்தைப் பெற அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்காவிட்டால், ரூ.500 அபராதம் அல்லது மூன்று மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு பொது மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காவல்துறை அறிவிப்பு: சென்னை மாநகர காவல்துறை சார்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிவிப்பில், மோட்டார் வாகனச் சட்டம் 1988பிரிவு 3-ன் படி வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பொது இடத்தில் வாகனம் ஓட்டக் கூடாது. பொது இடத்தில் வாகனத் தணிக்கையின்போது அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்கள்: கடந்த மார்ச் மாதக் கணக்கின் படி தமிழகத்தில் 2.38 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 12.34 லட்சம் பொதுப் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்களும், 2.26 கோடி மூன்று சக்கர, இரு சக்கர, இலகு ரக வாகனங்களும் அடங்கும். பொதுப் போக்குவரத்து வாகனங்களை இயக்க சுமார் 30 லட்சம் பேருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தவிர சொந்த வாகனங்களை ஓட்ட சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் உரிமங்களைப் பெற்றுள்ளனர். ஓட்டுநர் உரிமங்களைப் பெற தற்போது பல்வேறு நடைமுறைகள் உள்ளன.

உரிமங்களைப் பெற்றுத் தர அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் ஏராளமான தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. தற்போது சாதாரண ஓட்டுநர் உரிமம் பெற்ற தமிழக அரசு ரூ. 250-ஐ கட்டணமாக விதித்துள்ளது. ஆனால் நடைமுறையில் சுமார் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரை செலவாகிறது. 

நகல் உரிமங்களைப் பெற...: பொதுவாக ஓட்டுநர் உரிமங்கள் வயதினைப் பொருத்து சுமார் 20 ஆண்டுகள்வரை செல்லத்தக்க வகையில் வழங்கப்படுகின்றன. எனவே ஓட்டுநர் உரிமங்களைப் பெற்றவுடன் அதனை பிரதி எடுத்து வைத்துக் கொண்டு அசலை வீட்டில் பத்திரப்படுத்தி வைப்பது என்பது வழக்கமாக உள்ளது. ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி அட்டைகள், வருமான வரி நிரந்தர கணக்கு எண் உள்ளிட்ட பல்வேறு அட்டைகள் தொலைந்துவிட்டால் உடனடியாக இதில் தொடர்புடைய அலுவலகங்கள் அல்லது சேவை மையங்களில் இதற்கான கட்டணத்தைச் செலுத்தி உடனடியாகப் பெற்றுவிட முடியும். 

ஒரு வேளை அசல் ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால்..?

அசல் ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால் உடனடியாக நகல் உரிமத்தைப் பெற்றுவிட முடியாது. 

தொலைந்து போன உரிமம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். பின்னர் உரிமம் வழங்கிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்குச் சென்று அசல் உரிமம் வழங்கியபோது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைச் சரிபார்த்துவிட்டு குறிப்பு பெற்று மீண்டும் காவல் நிலையம் வரவேண்டும். பின்னர்தான் சி.எஸ்.ஆர். (சமுதாயப் பணி குறிப்பேடு) வழங்கப்படும்.

இதன் பின்னர் இப்புகாரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி இங்கு காவல் அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னர்தான் தொலைந்த உரிமத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை என போலீஸார் சான்று வழங்க முடியும். இந்தச் சான்றினை விண்ணப்பத்துடன் இணைத்து ரூ. 315 கட்டணத்துடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நகல் உரிமங்களைப் பெற சுமார் 20 நாள்கள்வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போதைய அறிவிப்பினையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், காவல் நிலையங்களிலும் தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நகல் உரிமங்களைப் பெற அலையத் தொடங்கியுள்ளனர்.

பொதுமக்களின் புலம்பல் இதுதான்...

அசல் ஓட்டுநர் உரிமத்தை உடன் வைத்திருப்பதில் சொல்லப்போனால் எந்த பிரச்னையும் இல்லை. எதிர்பாராத விதமாக அசல் ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால் அதனை பெறுவதில் இத்தனை நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால்தான், பொதுமக்கள் தயக்கம் காட்டுகிறார்கள்.

ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால், நகல் உரிமத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை எளிமைப்படுத்திவிட்டு, அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருக்கலாம். 

சாலை விபத்துகளைத் தடுக்கவே இந்த நடைமுறையை அறிவித்திருப்பதாக அரசு கூறியிருக்கிறது. சாலைகளை செப்பனிட்டு, மோசமான சாலைகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுத்துவிட்டு, பிறகு சாலை விதிகளை மீறுபவர்களால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுத்துவிட்டு, பிறகல்லவா இதுபோன்ற அறிவிப்புகளை அறிவிக்க வேண்டும்.

எந்த சட்ட திட்டமாக இருந்தாலும், உடனடியாக அது பொதுமக்களைக் கொண்டு, பொதுமக்களால் செய்யப்படத்தக்க, பொதுமக்களை ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கும் விதிமுறையை மட்டும் உடனடியாக அமல்படுத்தி அதை சாதனை பட்டியலில் சேர்த்துக் கொள்வது இன்னும் தொடருவது அழகல்ல.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்திருப்பவர்களைக் கண்டறியவே, இதுபோன்ற அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.

அப்படியே இருந்தாலும், ஒரு ஓட்டுநர் உரிமத்தின் எண்ணைக் கொண்டு அது செல்லத்தக்கதா என்பதை அறியும் தொழில்நுட்ப வசதியை போக்குவரத்துக் காவலர்களுக்கு ஏற்படுத்தித் தராமல், அசல் ஓட்டுநர் உரிமத்தை பொதுமக்கள் வைத்திருக்க வேண்டும் என்று மேலோட்டமாக ஒரு உத்தரவை பிறப்பித்து விட்டால் இந்த பிரச்னையில் தீர்வு ஏற்பட்டு விடும்,  சாலை விபத்துகள் குறைந்துவிடும் என்று எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை.

மோசமான சாலைகள், சாலை விதிகளை சரியாக பின்பற்றாத வாகன ஓட்டிகள் என சாலை விபத்துக்கு ஏராளமான காரணங்கள் இருக்கும் போது, கையில் இருக்கும் ஒரே ஒரு காகிதம் எல்லாவற்றையும் சரி செய்துவிடும் என்று நம்புவதோடு மக்களையும் நம்ப வைக்கும் முயற்சிக்குத்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்கிறார்கள் சாமானிய மக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com