ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக எடுக்கும்: மு.க.ஸ்டாலின்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பந்து ஆளுரிடம் இல்லாவிட்டால், திமுகவிடம் உள்ள பந்தைப் பயன்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக
ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக எடுக்கும்: மு.க.ஸ்டாலின்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பந்து ஆளுரிடம் இல்லாவிட்டால், திமுகவிடம் உள்ள பந்தைப் பயன்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்று கருதுவதற்கு இடமில்லை. பந்து என் கோர்ட்டில் இல்லை என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் தனது 11 ஆதரவு எம்.எல்.ஏ.-க்களுடன் ஆளுநரிடம் முன்பு கடிதம் கொடுத்தபோது, 15 தினங்களுக்குள் எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டார். 
அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தின் 11 ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவில்தான் இருந்தனர்.
ஆனால், இப்போது டிடிவி தினகரனின் எம்.எல்.ஏ.-க்கள் 19 பேர் கடிதம் கொடுத்திருக்கும்போது, அவர்களும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் என்பதால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்று ஆளுநர் கூறுகிறார்.
அரசியல் சட்டப்படி முதல்வர் தலைமையிலான அமைச்சரவைக்குக் கூட்டுப் பொறுப்பு உண்டு. அப்படியுள்ள அமைச்சரவை எப்போதும் சட்டப்பேரவையின் நம்பிக்கையைப் பெற்ற அமைச்சரவையாக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையானது, பெரும்பான்மை சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவின் அடிப்படையில் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளவே, முதல்வர் மீது நம்பிக்கை தீர்மானத்தையோ அல்லது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையோ கொண்டு வருகின்றன. 
முதல்வராக நியமிக்கப்படுபவரை சட்டப்பேரவையில் நம்பிக்கை பெற உத்தரவிடுவதும் இந்த அடிப்படையில்தான் என்பதை அரசியல் சட்டப் பதவியில் அமர்ந்திருக்கும் ஆளுநர் அறிந்திருக்கமாட்டார் என்பதை நான் நம்புவதற்கு தயாராக இல்லை.
எஸ்.ஆர்.பொம்மை வழக்கு: ஓர் அமைச்சரவையின் மீது நம்பிக்கை இருக்கிறதா, இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டிய இடம் ஆளுநர் மாளிகை இல்லை என்றும், சட்டப்பேரவையில் நடத்தப்படும் வாக்கெடுப்பு மூலமே முடிவுசெய்ய வேண்டும் என்றும் எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் கூறப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை ஆளுநர் படித்திருக்க மாட்டார் என்று நான் கருதவில்லை. 
எனினும், தமிழகத்தில் பாஜகவின் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தனது அரசியல் சட்டக் கடமைகளில் இருந்தும் தார்மீக பொறுப்பிலிருந்தும் ஆளுநர் தவறிச் செல்வது ஜனநாயகத்தின் மிகமோசமான இருண்ட பக்கங்களாகவே அமையும்.
டிடிவி தினகரனின் 19 உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று சட்டப்பேரவை துணைத் தலைவரே நோட்டீஸ் கொடுத்த பிறகும் அந்த 19 பேரும் அதிமுகவில்தான் இருக்கின்றனர் என்று ஆளுநர் கூறுவது வியப்பை அளிக்கிறது. அவர்கள் அதிமுகவில் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ஏன் நோட்டீஸ் அளிக்க வேண்டும்?
சட்ட விரோதம்: ஏதோ, உள்கட்சி தகராறு என்ற அளவில் பொறுப்புள்ள ஆளுநர் தெரிவித்து, வேடிக்கை பார்ப்பது, மைனாரிட்டியாக இருக்கும் முதல்வரை மெஜாரிட்டியாக இருப்பவர் போல் சித்திரிக்கும் அரசியல் சட்ட விரோத முயற்சியாகும்
இதுபோன்ற அரசியல் சட்ட விரோத நடவடிக்கைக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போன்ற மிகப்பெரிய ஜனநாயகவாதி ஒருவரின் அமைச்சரவையில், அமைச்சராக பொறுப்பேற்று இருந்த தமிழக பொறுப்பு ஆளுநர் உடன்படுவது மிகுந்த வேதனைக்குரியது. இதன் காரணமாகவே திமுக சார்பிலும், காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிட உள்ளோம். 
திமுகவிடம் பந்து: பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்ல வேண்டிய ஆளுநர் பந்து என்னிடம் இல்லை என்கிறார். அதில் உண்மையில்லையென்றாலும், திமுகவிடமும் பந்து இருக்கிறது என்பதால்தான், 40 நாள்கள் கழித்து குட்கா விவகாரத்தை கையில் எடுத்து 21 திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உரிமைக்குழு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே, ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக நலன்களைக் காப்பாற்றுவதற்கு திமுகவிடம் உள்ள பந்தை பயன்படுத்த எள் முனையளவும் தயங்கமாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com