பதவி விலக முதல்வர், துணை முதல்வருக்கு அவகாசம்: டிடிவி தினகரன் பேட்டி

முதல்வர், துணை முதல்வர் பதவிகளில் இருந்து விலக எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கால அவகாசம் அளிப்பதாக அதிமுக (அம்மா) துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
பதவி விலக முதல்வர், துணை முதல்வருக்கு அவகாசம்: டிடிவி தினகரன் பேட்டி

முதல்வர், துணை முதல்வர் பதவிகளில் இருந்து விலக எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கால அவகாசம் அளிப்பதாக அதிமுக (அம்மா) துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
சென்னையில் தனது இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு அவர் புதன்கிழமை அளித்த பேட்டி:-
எங்களது எம்.எல்.ஏ.க்கள் அளித்த கடிதத்தின் மீது ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்பதற்காக காத்திருக்கிறோம். அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாக ஆளுநர் தெரிவித்தால் அது குறித்து கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.-க்களுடன் ஆலோசித்து விரைவில் முடிவெடுப்போம். 
பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது அனைவருக்கும் தெரியும். பொதுச் செயலாளரை நீக்க வேண்டும் எனவும், துணைப் பொதுச் செயலாளரின் நியமனங்கள் செல்லாது எனவும் கூறுகிறார்கள். பதவி ஆசையில், பதவி வெறியில் செயல்படும் ஒரு நபர், துரோகச் சிந்தனையுடைய ஒருவர் தமிழகத்துக்கு எப்படி நல்ல முதல்வராக இருக்க முடியும்?
பிப்ரவரி 15-ஆம் தேதி தன்னை அடையாளம் காட்டிய பொதுச் செயலாளர் எங்கே இருக்கிறார். தியாகம் செய்து விட்டு சிறையில் உள்ளார். சிறிதுகூட இதயத்தில் ஈரம் இல்லாமல் பதவி வெறி காரணமாக முதல்வர் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பரை நீக்க வேண்டும் என்பதே கட்சித் தொண்டர்கள், எம்.எல்.ஏ.-க்களின் கோரிக்கை.
அவராக இறங்க வேண்டும் என்பதற்காக நேரம் கொடுக்கிறோம். அவருக்கே (பழனிசாமி) நன்றாகத் தெரியும். கடந்த திங்களன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் 77 சட்டப் பேரவை உறுப்பினர்கள் மட்டுமே சென்றனர். ஸ்லீப்பர் செல்களாக எங்களது எம்.எல்.ஏ.,க்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவராக வெளியே வருவார்கள்.
நாங்கள் உருவாக்கியது: தமிழகத்தில் நடப்பது மறைந்த ஜெயலலிதாவின் அரசாங்கம். சசிகலா உதவி செய்ததால் இந்த அரசு தொடர்கிறது. நாங்கள் உருவாக்கிய அரசாங்கத்துக்கு எங்களால் இடர் வந்து விடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு (முதல்வர்) நேரம் கொடுக்கிறோம். 
தானாகவே உணர்ந்து முதல்வரும், இரட்டை இலையை முடக்கக் காரணமாக இருந்த பன்னீர்செல்வமும் பதவி விலகினால்தான் இதற்கு முடிவு வரும். அதற்கு காலம் கொடுக்கிறோம். நிச்சயம் அதில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
பொதுக்குழு கூட்டம்: பொதுக் குழுவைக் கூட்டுவதற்கான அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உள்ளது. அவர் சார்பாக அதிமுக அம்மா அணியின் பொதுக் குழுவை கூட்ட துணை பொதுச் செயலாளராகிய எனக்கு அதிகாரம் உண்டு. எனவே, அவர்கள் அறிவித்த பொதுக்குழு செல்லாது என்பதை விரைவில் உணரப் போகிறீர்கள்.
இரு அணிகள் இணைந்தாலும் கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா தான். எங்களுக்கு எதிராகச் செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் சேர்ந்துதான் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை ஏற்றுக் கொண்டார்கள். 
அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுச் செயலாளராக சசிகலாதான் இருப்பார். அவரது ஒப்புதலுடன் நியமிக்கப்பட்ட பொறுப்புகள் செல்லும்.
ஆளுநர் பதில்: பெரும்பான் மை இருப்பதாக ஆளுநர் தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அது குறித்து சட்ட வல்லுநர்களுடனும், மூத்த நிர்வாகிகளுடனும் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
பாஜக அமைச்சர்களுடன் தமிழக அமைச்சர்கள் சிலர் தில்லியில் சந்திப்பு நடத்தியுள்ளனர். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அனைவரும் தில்லி சென்று அங்கு தவறான தகவல்களைக் கொடுத்து வருகிறார்கள்.
தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் 122 எம்.எல்.ஏ.-க்கள் கூடியதாகக் கூறுகிறார்கள். புதுவையில் 22 பேர், தோழமைக் கட்சியினரையும் சேர்த்தால் எப்படி 122 பேர் கூடியிருக்க முடியும்? குறைத்துக் காண்பித்தால் ஆட்சி போய் விடும் என்பதற்காக, சொல்கிறார்கள். தவறான தகவல்களைக் கூறுகிறார்கள். 
தியாகத்துக்கு இப்போது ஏற்பட்டுள்ள சோதனைக்கு விடிவு கிடைக்கும். தனிப்பட்ட பலனுக்காகவோ, பதவி ஆசையிலோ இதைச் செய்யவில்லை. துரோகம் வீழ்த்தப்பட வேண்டும். தமிழக மக்களுக்கு சரியான ஆட்சி கிடைக்க வேண்டும். துரோக சிந்தனை இல்லாத ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்பதே எங்களது எம்.எல்.ஏ.,க்கள், தொண்டர்களின் எண்ணம்.
பாஜகவின் தலையீடா? எங்களது ஆள்கள் சரியில்லை. துரோக சிந்தனையுடன் செயல்படுகிறார்கள். எப்படியாவது பதவியில் ஒட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஊழல் ஆட்சி எனக் கூறியவர்களைச் சேர்த்துக் கொண்டு, முதல்வர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. அவர் சரியில்லாத போது அடுத்தவரை குறைகூறுவது கண்ணியமாக இருக்காது.
முதல்வர் பதவியில் உள்ளவர், தன்னை பதவியில் அமர்த்தியவருக்கே துரோகம் செய்ய வேண்டும். கட்சி அழிந்தாலும் பரவாயில்லை. தொண்டர்கள் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி. எப்படியாவது பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்போரைத்தான் குறைகூற முடியும்.
வெளியில் உள்ளவர்களைக் குறை கூறுவது தவறு. அவர்களது (முதல்வர் அணியினர்) சுபாவமே சரியல்ல. கட்சித் தலைமை வலுவாக இருக்கிறது. கட்சியை குழப்பப் பார்க்கிறார்கள். நிச்சயம் இதற்கு முடிவு வரும் என்றார் டிடிவி தினகரன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com