ஸ்டாலின் - வைகோ இடையேயான 'இணக்கம்' நீடிக்குமா?

திமுக - மதிமுக இடையேயான பகைமை உணர்வு மெல்ல மெல்ல மறைந்து, ஸ்டாலின் - வைகோ இடையேயான இணக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது, அரசியலை உற்று கவனித்து வருபவர்களால் எளிதில் உணர முடியும்.
ஸ்டாலின் - வைகோ இடையேயான 'இணக்கம்' நீடிக்குமா?


சென்னை: திமுக - மதிமுக இடையேயான பகைமை உணர்வு மெல்ல மெல்ல மறைந்து, ஸ்டாலின் - வைகோ இடையேயான இணக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது, அரசியலை உற்று கவனித்து வருபவர்களால் எளிதில் உணர முடியும்.

சமீபகாலமாக, ஸ்டாலின் செயல்பாடுகளை வைகோ பாராட்டுவது, வைகோவை ஸ்டாலின் ஆதரிப்பது போன்ற செயல்பாடுகள் பகிரங்கமாகவே செய்யப்பட்டு வருகிறது.

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க வந்த வைகோவை, திமுக தொண்டர்கள் சூழ்ந்து கொண்ட போது, அவர்களை விலகச் சொன்ன ஸ்டாலின் பேச்சில் அப்போதே லேசான இணக்கம் வெளிப்பட்டது.

அதற்கேற்றார்போல, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதை உணர்த்தும் விதமாக, சட்டப்பேரவைக்குள் ஸ்டாலின் குட்காவை எடுத்து வந்ததை, நேரடியாகவே வைகோ ஆதரித்தார்.

மலேசிய விமான நிலையத்தில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற வைகோ தடுத்து நிறுத்தப்பட்டதற்கு ஸ்டாலின் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது உடனடியாக.

கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்திக்க வந்திருந்த வைகோவை, நுழைவாயில் வரை வந்து வரவேற்று அழைத்துச் சென்றார் ஸ்டாலின். 

செப்டம்பர் 5ம் தேதி திமுகவின் குரலாக விளங்கும் முரசொலி பத்திரிகையின் பவள விழாவை முன்னிட்டு நடைபெறும் பொதுக் கூட்டத்துக்கும் வைகோ அழைக்கப்பட்டுள்ளார்.

ஸ்டாலின் - வைகோ இடையேயான உறவு இணக்கமான சூழ்நிலைக்குச் சென்று கொண்டிருப்பது ஒரு நல்ல அறிகுறியாகவே இருப்பதாக மதிமுக மூத்த தலைவர் கூறுகிறார்.

ஆனாலும், இந்த உறவு நீடிக்குமா என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது என்றும், தற்போதிருக்கும் சூழ்நிலையில், இந்த உறவு தேர்தல் கூட்டணியாக மாறும் என்பதை கணிக்க இயலாது என்றும் கூறியுள்ளார்.

2004ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி வைத்து 4 மக்களவைத் தொகுதிகளை வென்ற பிறகு, மதிமுக 2006ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது.

இந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்று தொடங்கி, மிகப்பெரிய தோல்வியைத் தழுவி, பின்னர் காரணமின்றி அதில் இருந்தும் வெளியேறினார் வைகோ. அதோடு, திமுகவுடன் இணைவதற்காக விஜயகாந்த் பேச்சுவார்த்தை நடந்தி வந்த நிலையில், தன் அணியில் சேர்த்து இரு அணிகளின் தோல்விக்கும் மறைமுகமாக மிகப்பெரிய காரணமாக இருந்தவர் வைகோ.

தற்போது மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறிய வைகோ, திமுகவுடன் சுமூகமான உறவை வைத்துக் கொண்டாலும், இது தேர்தல் கூட்டணியாக மாறுமா என்பதில் எந்த உறுதியும் இல்லை என்பதே இரு அணிகளின் கணிப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com