'தீரன்' திரைப்படத்துக்கு இடைக்காலத் தடை கோரி வழக்கு

தீரன்' திரைப்படத்தில் சீர்மரபினர் சமுதாயத்தினர் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ள காட்சிகளை நீக்கும் வரை இந்தத் திரைப்படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில்,
'தீரன்' திரைப்படத்துக்கு இடைக்காலத் தடை கோரி வழக்கு

தீரன்' திரைப்படத்தில் சீர்மரபினர் சமுதாயத்தினர் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ள காட்சிகளை நீக்கும் வரை இந்தத் திரைப்படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், வழக்குரைஞர் ஆணையர்களை நியமிப்பது தொடர்பாக மனுதாரரின் ஒப்புதலை கேட்டு தெரிவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

இதுதொடர்பாக, மதுரை சீர்மரபினர் நலச்சங்கத்தை சேர்ந்த பசும்பொன் தாக்கல் செய்த மனு: 

நடிகர் கார்த்தி நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற திரைப்படம் நவம்பர் 17 -ஆம் தேதி திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், தமிழகத்தில் சீர்மரபினர் பட்டியலில் உள்ள 235 பிரிவு சமுதாயத்தினரையும் தவறாக சித்திரித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 1995 -ஆம் ஆண்டு முதல் 2003 வரை சென்னையில் நடந்த திருட்டுச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திருட்டுக்களில் ஈடுபட்டவர்களை 2005 -ஆம் ஆண்டே போலீஸார் கண்டுபிடித்துவிட்டனர். 

திருட்டுக்களில் ஈடுபடுபவர்கள் ராஜஸ்தான், ஹரியாணா, புதுதில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் வசித்து வரும் 'பவாரியா' சமூகத்தைச் சேர்ந்த சீர்மரபினர் ஆவர்.

ஆனால், இந்த திரைப்படத்தின் இயக்குநர் வரலாற்று ஆவணங்களை சரியாக ஆய்வு செய்யாமல், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தவறாக சித்திரித்துள்ளார். இதில் 'குற்றப் பரம்பரை' என்ற வார்த்தை இடம்பெறுகிறது. மேலும், கதாநாயகன் 'குற்றப் பரம்பரையின் வரலாறு' என்ற தமிழ் புத்தகத்தை படிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. 

திரைப்படச் சட்டம் 1952 -இன் படி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை அவதூறு பரப்பும் வகையில் திரைப்படங்களை வெளியிடக்கூடாது. எனவே, 'தீரன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சீர்மரபினர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்கும் வரை இந்தப் படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். திரைப்படத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் 50 சதவிகிதத்தை சீர்மரபினர் சமூக மேம்பாட்டுக்காக செலவிட உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ' நான் இந்தத் திரைப்படத்தை பார்க்கவில்லை. படத்தை பார்க்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இந்த திரைப்படம் ரூ. 6 கோடி செலவில் எடுக்கப்பட்டு திரையிடப்பட்டுள்ளது. எனவே, திரைப்படத்தை பார்த்து அறிக்கை சமர்ப்பிக்க 2 வழக்குரைஞர் ஆணையர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மனுதாரர் அவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த செலவை மனுதாரர் ஏற்றுக்கொள்வாரா என்பதை அவரிடம் கேட்டுத் தெரிவிக்க வேண்டும்' என மனுதாரர் தரப்பு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 5 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com