உயர் கல்வி நிறுவனங்களுக்கும் தரவரிசைப் பட்டியல் 8 மாதங்களில் வெளியாகும்: உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் தகவல்

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைப் போலவே தமிழகத்திலும் உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் என்று உயர் கல்வித் துறை முதன்மைச்
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் கோவையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய உயர் கல்வித் துறை கருத்தரங்கில் பேசுகிறார் அரசு முதன்மைச் செயலர் சுனில் பாலிவால்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் கோவையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய உயர் கல்வித் துறை கருத்தரங்கில் பேசுகிறார் அரசு முதன்மைச் செயலர் சுனில் பாலிவால்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைப் போலவே தமிழகத்திலும் உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் என்று உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் தேசிய அளவிலான உயர் கல்வி மாநாடு கோவையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சிஐஐ மண்டலத் தலைவர் எஸ்.நாராயணன் தலைமை வகித்தார். மாநாட்டுத் தலைவர் ஆர்.நந்தினி, துணைத் தலைவர் எஸ்.மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டைத் தொடங்கிவைத்து சுனில் பாலிவால் பேசியதாவது:
பள்ளிக் கல்வியும், உயர் கல்வியும் நாட்டின் வளர்ச்சியை மாற்றும் வல்லமை படைத்தவை. கற்பவர்களின் விகிதம் உயரும்போது நாடும் முன்னேறும். தமிழகத்தில் உயர் கல்வித் துறை நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. கல்வி வளர்ச்சி காரணமாக, பல்வேறு துறைகளில் தமிழகம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதம் 44.30 சதவீதமாக உள்ளது என்றார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் நிறுவனம் (என்.ஐ.ஆர்.எஃப்.) கடந்த ஆண்டு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் நாட்டில் உள்ள முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பல்கலைக்கழகங்கள், 37 கல்லூரிகள் இடம் பெற்றிருந்தன.
அதேபோல, மாநிலத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் தரத்தை உயர்த்தி, தரவரிசைப் பட்டியலில் முன்னுக்குக் கொண்டு வர அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களைத் தரவரிசைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் 8 மாதங்களில் தமிழகத்தில் உள்ள அரசு, உதவிபெறும் 22 பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளும் தேசிய தர நிர்ணய மதிப்பீட்டுக் குழுவின் (நாக்) அங்கீகாரத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக் காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே, அடுத்த துணைவேந்தரைத் தேர்வு செய்யும் பணி நடைபெறும். இதற்காக தேர்வுக் குழு அமைத்து 4 மாதங்களுக்குள் துணைவேந்தரைத் தேர்வு செய்யும்படி வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
கருத்தரங்கில், தொழில் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பி.ரவிச்சந்திரன், முன்னாள் தலைவர் சி.ஆர்.சுவாமிநாதன், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com