அறையை விட்டு வெளியே சென்று அடிக்கடி தொலைபேசியில் பேசிய தேர்தல் அதிகாரி: விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு! 

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி என்னுடைய மனு பரிசீலனையில் பொழுது அறையை விட்டு அடிக்கடி வெளியே சென்று தொலைபேசியில் பேசிய பிறகே, என் மனு நிராகரிப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று நடிகர் விஷால்.. 
அறையை விட்டு வெளியே சென்று அடிக்கடி தொலைபேசியில் பேசிய தேர்தல் அதிகாரி: விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு! 

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி என்னுடைய மனு பரிசீலனையில் பொழுது அறையை விட்டு அடிக்கடி வெளியே சென்று தொலைபேசியில் பேசிய பிறகே, என் மனு நிராகரிப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று நடிகர் விஷால் குற்றம் சாட்டியுள்ளார்.    

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி டி.டி.வி. தினகரன் அணி, ., நடிகர் விஷால் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனுக்களின் பரிசீலனை செவ்வாயன்று தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரியால் நடத்தப்பட்டது. அதில் திமுகவின் மருது கணேஷ், அதிமுகவின் மதுசூதனன் மற்றும் டிடிவி தினகரன் மற்றும் பாஜக வேட்பாளர் நாகராஜன் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

ஆனால் நடிகர் விஷாலின் மனு மீதான பரிசீலனை நடைபெற்ற பொழுது திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் எதிர்ப்பு தெரிவித்தனர். வேட்பு மனுவுடன் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் பல விவகாரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பல்வேறு விவரங்கள் தவறாக கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அத்துடன் விஷால் ஆர்.கே.நகரில் குடியிருப்பதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் அவரது மனுவினை முன்மொழிந்தவர்கள் பெயர் ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியலில்  இடம்பெறவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக அங்கு குழப்பம் நிலவியது. இறுதியில் விஷால் வேட்பு மனு பரிசீலனை தற்பொழுது நிறுத்தி வைக்கப்படுவதாகவும், செவ்வாய் மாலை இறுதியாக தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் பரிசீலனை மீண்டும் நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.     

அதன்படி நடைபெற்ற பரிசீலனையில் நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

பொதுவாக ஒரு வேட்பாளரின் மனுவினை அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள 10 பேர் முன்மொழிய வேண்டும். ஆனால் விஷாலின் மனுவினை முன்மொழிந்தவர்கள்ல் இருவரது பெயர்கள் ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியலில்  இடம்பெறவில்லை; எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரி விளக்கமளித்தார்

இதனைத் தொடர்ந்து விளக்கம் கேட்பதற்காக தேர்தல் அலுவலகத்துக்கு நடிகர் விஷால் வருகை தந்தார். அங்கு அவருக்குக் கிடைத்த விளக்கம் திருப்தி அளிக்காததால் வெளியில் வந்த அவர் உடனடியாக தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தின் முன்பு தரையில் அமைந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாதா? எனது தேர்தல் மனுவினை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்; அதற்கு ஆதாரம் உள்ளது' என்று தெரிவித்தார். உடனடியாக அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் விஷாலை சமாதானம் செய்து தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறியதனை அடுத்து, போராட்டத்தை அவர் கைவிட்டார். 

பின்னர் தேர்தல் அதிகாரியிடம் பேசிய விஷால் தனது மனுவினை முன்மொழிந்தவர்கள் அதிமுக வேட்பாளர் மதுசூதனனால் மிரட்டப்பட்டதாக ஒரு ஆடியோவையும் வெளியிட்டார். இதனை தேர்தல் அதிகாரியிடமும் அவர் உரிய விளக்கம் அளித்தார். அடுத்த 5-வது நிமிடத்தில் வெளியே வந்த நடிகர் விஷால் தன்னுடைய வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது, தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பு தந்துள்ளது என்றார். நாளை முதல் களத்தில் சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு சென்றார்.

இதையே தன்னுடைய டுவிட்டர் பக்கத்திலும் விஷால் பதிவிட்டிருந்தார். இதற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதே சமயம் விஷாலின் வேட்புமனுவை ஏற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையினர் மறியலில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், திடீர் திருப்பமாக இரவு 11 மணியளவில் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், மாலையில் மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது விஷாலின் வேட்பு மனுவை முன்மொழிந்த 10 பேரில் இருவர் தாங்கள் கையெழுத்திடவில்லை என மறுத்ததாகவும், வங்கிக் கணக்கு விவரங்கள், தவறான குடியிருப்பு முகவரி உள்ளிட்ட காரணங்களால் மனு நிராகரிக்கப்படுவதாகவும் தேர்தல் நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமி அறிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விஷால் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. மனு ஏற்கப்பட்டதாக அறிவித்து பின்னர் ஏன் நிராகரித்தார்கள் எனத் தெரியவில்லை; சுயேட்சை வேட்பாளர் ஒருவரை ஆதரித்து வெற்றி பெற வைப்பேன் என தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் விஷால் புதன்கிழமை காலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறியதாவது:

என்னுடைய வேட்பு மனுவானது திட்டமிட்டே நிராகரிக்கப்பட்டுள்ளது.எனது மனுவினை முன்மொழிந்தவர்கள் கடுமையாக மிரட்டப்பட்டதன் காரணமாகவே பின்வாங்கியுள்ளார்கள். இனி எதிர்காலத்தில் நான் கவனமாக இருப்பேன்.

எனக்கு என்ன நடக்கிறது என்று மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். எனக்குப் பின்னால் கமலஹாசனோ , டிடிவி தினகரனோ அல்லது திமுகவோ இருப்பதாக கூறப்படுவது உண்மையில்லை. அதே போல ஆர்.கே.நகரில் உள்ள தெலுங்கு பேசும் மக்களை  குறிவைத்து நான் நிற்க விரும்பியதாக கூறப்படுவதும் தவறு.நான் ஜாதி மதம் பார்ப்பதில்லை. ஒரு இந்தியன் என்ற அடிப்படையில்தான் நான் இந்த தேர்தலில் போட்டியிட விரும்பினேன். 

எனது மனு நிராகரிப்பின் பின்னால் ஒரு பெரிய தவறு இருக்கிறது. முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்ட ஆடியோ ஆதாரம் உள்ளது. அதே போல் முதலில் என்னுடைய வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் கூறியதற்கு அங்கேயே வீடியோ ஆதாரங்கள் இருக்கிறது.

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி என்னுடைய மனு பரிசீலனையில் பொழுது அறையை விட்டு அடிக்கடி வெளியே சென்று தொலைபேசியில் பேசினார். நான் அவரிடம் நீங்கள்தான் முடிவு செய்யுமிடத்திலிருக்கிறீர்கள்.வேறு யாரிடமும் பேச வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தேன்.ஆனால் அவ்வாறு அவர் பேசிய பிறகே, என் மனு நிராகரிப்பு முடிவு எடுக்கப்பட்டுள்ளது 

எனக்கு இழைக்கப்பட்டுள்ள தவறுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். எனக்காக மட்டும் அல்ல; இது ஜனநாயகத்திற்கே ஏற்பட்ட அநீதி. அதிகாரியை மாற்றுவது மட்டுமே தீர்வாகாது. எனக்கு தெளிவான விளக்கம் வேண்டும்.

இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com