ஆளுநர் ஆய்வு தொடர்ந்தால் திமுக போராடும்: மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை

ஆளுநர் மாவட்ட வாரியாக ஆய்வுகளை தொடர்ந்தால் அதனை எதிர்த்து திமுக அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
ஆளுநர் ஆய்வு தொடர்ந்தால் திமுக போராடும்: மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை

ஆளுநர் மாவட்ட வாரியாக ஆய்வுகளை தொடர்ந்தால் அதனை எதிர்த்து திமுக அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைத் தொடர்ந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்திருப்பது, ‘ராஜ்பவன்’ மத்திய பா.ஜ.க. அரசின் அரசியல் நடவடிக்கைகளுக்கு தீவிரமாகவும் பரவலாகவும் பயன்படுத்தப்படுகிறதோ என்ற பலத்த சந்தேகத்தை எழுப்புவதோடு, “இது ஆய்வு அல்ல, வெளிப்படையான அரசியல்”, என்பதை உணர்த்துகிறது. "மாநில சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி” எனும் மாபெரும் முழக்கம் ஓங்கி ஒலிக்கும் தமிழ் மண்ணில், அதற்கு நேரெதிராக நடைபெறும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

“அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவேன்”, “வெளிப்படையான நிர்வாகத்திற்கு வித்திடுவேன்”, என்றெல்லாம் பல வாக்குறுதிகளை அளித்துப் பதவியேற்ற ஆளுநர், தற்போது மத்திய அரசின் திட்டங்களுக்குத் தூதுவராக செயல்பட்டு, பல மாவட்டங்களுக்குச் சென்று கொண்டிருப்பது ஆளுநரின் வரம்புகளை இன்னும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை எடுத்துக் காட்டுகிறதா அல்லது “எல்லை - வரம்புகள்” தெரிந்திருந்தும் மத்திய பா.ஜ.க. அரசின் கட்டளைப்படி தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு இதுவரை இல்லாத நற்பெயரை திரட்டிவிட வேண்டும் என்று கருதுகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது.

மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமல்ல, மாநில அரசின் திட்டங்களும் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யும் பொறுப்பையோ, அதிகாரத்தையோ நிச்சயமாக அரசியல் சட்டம் நியமன ஆளுநர்களுக்கு வழங்கிடவில்லை. அப்படியிருக்கும் சூழலில் இதுபோன்ற ஆய்வுகளில் ஆளுநர் அவர்கள் ஈடுபடுவது மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களில் ராஜ்பவன் மூலம் ஆக்கிரமித்து, தனியாதிக்கம் செலுத்தும் செயலாகும். அதுமட்டுமின்றி, இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவதன் மூலம், பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஆளுநருக்கு நம்பிக்கை குறைந்துவிட்டதோ என்ற சந்தேகமும் மக்கள் மனதில் எழுந்து வருகிறது.

ஒக்கி புயல் கொடுமையால் குமரியில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அரசு நிர்வாகத்தில் இருப்பவர்களோ ஆளுக்கொரு கணக்கைச் சொல்வதுடன், காணாமல் போன மீனவர்களை மீட்க முடியாமல் ‘குதிரை பேர’ ஆட்சி தத்தளித்து, தடுமாறி நிற்கிறது. அரசு நிர்வாகம் முற்றிலும் துவண்டு தோல்வியடைந்து விட்டதால் இன்றைக்கு மக்கள் சொல்லொனாத் துயரத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். தங்கள் குடும்பத் தலைவர்களைக் காணாமல் ஆயிரக்கணக்கான மீனவ சமுதாய தாய்மார்கள் கதறித் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கு எல்லாம் காரணம் என்ன?

மத்திய பா.ஜ.க. அரசின் கட்டளையை ஏற்று, மைனாரிட்டி அரசை பதவியில் நீடிக்க அனுமதித்து வரும் ‘ராஜ்பவன்’ அதிகார வர்க்கம்தான் தங்களின் இன்னல்களுக்கு எல்லாம் முழுமையான காரணம் என்பதை மாநில மக்கள் இன்றைக்கு மிக நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையமே மாநிலத்தில் உள்ள அதிமுக அரசுக்கு மெஜாரிட்டி இல்லை என்பதை ‘இரட்டை இலை சின்னம்’ வழக்கில் தெளிவாக்கிவிட்ட நிலையிலும், ஸ்திரத்தன்மையை இழந்து ஸ்தம்பித்து நிற்கும் மாநில அரசின் நிர்வாகத்தைச் சரி செய்ய தனது அரசியல் சட்டக்கடமையை நிறைவேற்றத் தவறிவிட்ட ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்சர் போல் மாவட்டங்களில் ஆய்வுகளை தொடருவதை ‘மக்கள் நலன்’ என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

புயலால் பாதிக்கப்பட்டுள்ள குமரி மாவட்ட மக்கள், ‘குதிரை பேர’ அதிமுக அரசின் மோசமான நிர்வாகத்தினால் கடும் துயரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்கள் ஆகியோர் மீது மேதகு ஆளுநருக்கு உண்மையில் அக்கறை இருக்குமென்றால், மைனாரிட்டி ஆட்சி நடத்தி ‘இமாலய தோல்வி’ அடைந்துள்ள ‘குதிரை பேர’ அதிமுக அரசின் நிர்வாக அலங்கோலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அழைத்து, “உடனடியாக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபியுங்கள்”, என்று உத்தரவிட்டிருக்க வேண்டும்.

ஆனால், அதை விடுத்து அரசியல் சட்ட விரோத ‘குதிரை பேர’ அரசு நீடிக்க அனுமதி அளித்துள்ள காரணத்தால், அரசு கஜானாவைச் சுரண்டி ஆட்சி நடத்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் துணிச்சல் துளியும் இல்லாமல், மத்திய பாஜக அரசுக்கு அடிபணிந்து கிடக்கிறார். முதுகெலும்பு இல்லாத முதல்வர் பதவியில் நீடிக்கும் காரணத்தினால், மேதகு ஆளுநர் தன்னிடம் உள்ள, “மக்கள் நலன் காக்கும்” அந்த அதிகாரத்தை “ராஜ்பவனிலேயே” அமர வைத்து விட்டு, தலைமைச் செயலகத்தில் உள்ள மாநில அரசின் அதிகாரத்தை கையிலெடுத்துக் கொண்டு, இதுபோன்ற ஆய்வுகளில் மாவட்டந்தோறும் ஈடுபடுவது தமிழக மக்களின் மீதான அக்கறையால் அல்ல, இது முழுக்க முழுக்க சட்ட விரோத அரசியல் பணி.

இந்த அரசியல் பணியை அவர் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசிற்காக திட்டமிட்டு செய்கிறார். இதுபோன்ற அரசியல் பணிகளுக்காக ஆளுநர் பதவி உருவாக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, “குமரி துயரத்தில்” இருந்து மீள முடியாமல் தவிக்கும் மக்களுக்கு அதிகாரிகள் மட்டத்தில் நடக்கும் ஏதோ ஒரு சில நிவாரண நடவடிக்கைகளையும் “ஆளுநரின் குமரி ஆய்வு” பாதிக்கும் செயலாக அமைந்துவிட்டது என்பதையும் இந்த நேரத்தில் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, மாவட்டங்களில் ஆய்வு செய்யும் “அரசியல் பணியை” மேதகு ஆளுநர் உடனடியாகக் கைவிட்டு, இப்போது நடைபெற்று வரும் மக்கள் விரோத மைனாரிட்டி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல்வருக்கு உத்தரவிட முன் வரவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். “பெரும்பான்மை உள்ளவர்தான் மாநிலத்தின் முதல்வராக நீடிக்க வேண்டும்”, என்பதை உறுதி செய்யும் தன் அரசியல் சட்டக்கடமையை நிறைவேற்றாமல், மாவட்டரீதியாக இப்படிப்பட்ட ஆய்வுகளை இனிமேலும் தொடர்ந்து, “மாநில சுயாட்சி” கொள்கையையும் "இந்திய நாட்டின் கூட்டாட்சி” தத்துவத்தையும் வலுவிழக்க வைக்க முயன்றால், இனிவரும் காலங்களில் ஆளுநர் ஆய்வுக்குச் செல்லும் மாவட்டங்கள் அனைத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டிய நிலை உருவாகும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com