கடலூரில் தங்கம் கடத்தும் கும்பல் சிக்கியது

கடலூரில் தங்கக் கடத்தல் கும்பலை காவல் துறையினர் புதன்கிழமை பிடித்தனர்.
கடலூரில் தங்கம் கடத்தும் கும்பல் சிக்கியது

கடலூரில் தங்கக் கடத்தல் கும்பலை காவல் துறையினர் புதன்கிழமை பிடித்தனர்.
 கடலூர் தலைமைத் தபால் நிலையம் அருகே புதன்கிழமை தமுமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தக் கூட்டத்தின் அருகே வந்த காரிலிருந்து ஒருவர் திடீரென கீழே குதித்தார். முகத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் கூட்டத்துக்குள் ஓடினார். அவரை துரத்திக்கொண்டு 2 பேர் ஓடி வந்தனர்.
 அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், காயமடைந்தவரையும், அவரை துரத்தி வந்த இருவரையும் பிடித்தனர். ஆனால், காரிலிருந்த மேலும் 3 பேர் தப்பிவிட்டனர். காரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 பிடிபட்டவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், காயமடைந்தவர் நாகை மாவட்டம், பூம்புகார் மீனவர் காலனியை சேர்ந்த செட்டி மகன் ஜெகன் என்ற சுதன் (28) என்பது தெரிய வந்தது.
 கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரை சென்னையைச் சேர்ந்த தங்கம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் சந்தித்து, இலங்கையிலிருந்து படகில் வரும் தங்கத்தை கடத்தி வர வேண்டும் என்று கூறினராம்.
 இதையடுத்து ஜெகன், அவரது மாமா பாக்கியராஜ் உள்பட 5 பேர் சேர்ந்து தங்கத்தை கடத்தி சென்னையைச் சேர்ந்தவரிடம் கொடுத்தனராம்.
 தலா 100 கிராம் எடை கொண்ட 120 தங்க பிஸ்கட்டுகளில் 37 பிஸ்கட்டுகள் குறைந்ததாகத் தெரிகிறது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த கும்பல் ஜெகன் உள்ளிட்ட 5 பேரையும் தேடிவந்த நிலையில் ஜெகன் மட்டும் சிக்கிக் கொண்டாராம். அவரை சீர்காழியிலிருந்து புதன்கிழமை காரில் சென்னைக்கு 5 பேர் அழைத்துச் சென்றனர். அப்போது, மீதமுள்ள தங்கக் கட்டிகள் குறித்த விவரத்தை தெரிவிக்காவிட்டால் அவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டினராம். இதனால், அச்சமடைந்த ஜெகன், கடலூர் வந்த போது காரின் வேகம் குறையவே அதிலிருந்து தப்பிக்க குதித்தது தெரிய வந்தது.
 பிடிபட்ட சென்னை எண்ணுரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ராஜா (29), நாகை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த சேஷப்பன் மகன் செண்பகராஜ் (20) ஆகியோரிடம் கடலூர் புதுநகர் காவல் ஆய்வாளர் கி.சரவணன் விசாரணை நடத்தினார். தப்பியோடிய மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 சம்பவம் தொடர்பாக நாகை மாவட்டம், ஏ.கே.சத்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீஸார் கடலூருக்கு வந்து, 3 பேரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com