சிறுமி ஹாசினியைக் கொன்ற தஷ்வந்த் மும்பையில் கைது: சுற்றிவளைத்தது எப்படி?

சிறுமி ஹாசினியைக் கொன்ற தஷ்வந்த், நகைக்காக தாயைக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் மும்பையில் நேற்று கைது செய்யப்பட்டார்.
சிறுமி ஹாசினியைக் கொன்ற தஷ்வந்த் மும்பையில் கைது: சுற்றிவளைத்தது எப்படி?

மும்பை: சிறுமி ஹாசினியைக் கொன்ற தஷ்வந்த், நகைக்காக தாயைக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் மும்பையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

குன்றத்தூர் சம்பந்தன்நகர் ஸ்ரீராம் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். மனைவி சரளா. மகன் தஷ்வந்த். இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு வரை போரூர் மதனந்தபுரம் மாதா நகரில் வசித்தனர். அங்கு தஷ்வந்த் 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தார். இவ்வழக்கில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். 

சிறையில் இருந்த அவரை வெளியே கொண்டுவர பெற்றோர் முயற்சி எடுத்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் குன்றத்தூருக்கு இடம் பெயர்ந்தனர்.

சிறையில் இருந்து ஜாமீனில் செப்டம்பர் மாதம் வெளிவந்த தஷ்வந்த் பெற்றோரிடம் செலவுக்குப் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இதனால் பெற்றோருக்கும், தஷ்வந்துக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 2-ஆம் தேதி வீட்டில் இருந்த தஷ்வந்த், தாய் சரளாவிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர் தர மறுத்ததால் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்துவிட்டு, கழுத்தில் இருந்த 25 சவரன் நகைகளை எடுத்துச் சென்றுள்ளார் தஷ்வந்த். குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய தஷ்வந்தை தேடினர். 

தஷ்வந்துக்கு குதிரை பந்தயம், சூதாட்டம் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம் என்பதால் மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பிரபலமான கிளப்புகள், ரேஸ் மையங்கள் ஆகியவற்றுக்கு சென்னை தனிப்படை போலீஸார் தகவல் அனுப்பி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மும்பையில் கைது: இந்நிலையில், மும்பை ரேஸ்கோர்ஸில் தஷ்வந்த் இருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மும்பை சென்ற போலீஸார் தஷ்வந்தை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தஷ்வந்த் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முன்னதாக, மும்பை ரேஸ் கோர்ஸ் பகுதியில் தஷ்வந்த் இருப்பான் என்ற சந்தேகத்தில், 3 காவலர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே, தஷ்வந்த் குதிரைப் பந்தயம் நடக்கும் இடத்துக்கு வந்த போது, அவன் எதிர்பாராத வகையில், சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டான்.

இது குறித்து உடனடியாக மும்பை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். தற்போது மும்பையில் இருந்து சென்னைக்கு அழைத்துச் செல்வதற்கான அனுமதிக் கடிதத்துக்காக காவல்துறையினர் காத்திருக்கின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், தஷ்வந்த் கொண்டு வந்த தங்க நகைகளை ஜேம்ஸ் மற்றும் டேவிட் என்பவர்கள் விற்பனை செய்து கொடுக்க உதவியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு தஷ்வந்த் தனது தாயைக் கொன்றுவிட்டு வந்தது தெரிந்திருக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

அதே சமயம், விசாரணை அதிகாரிகளில் ஒருவர் இது குறித்து கூறுகையில், தஷ்வந்த் நகைக்காக தனது தாயையே கொன்று  இருப்பார் என்று நம்பமுடியவில்லை என்றார். 

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து தஷ்வந்த் நெடுஞ்தூரம் செல்லும் ரயிலில் தப்பிச் சென்றிருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினோம். அந்த வகையில் மும்பையில் அவன் கைது செய்யப்பட்டான் என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஹாசினியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கு விசாரணை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விடுமுறை என்பதால் விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, தஷ்வந்த் தலைமறைவான தகவல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com