தெருவிளக்கு வெளிச்சத்தில் விடியலைத் தேடும் குழந்தைகள்

அடிப்படை வசதிகள் பரவலாக்கப்பட்டு, தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் கூட, விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே ஆகாசம்பட்டு ஊராட்சி அச்சிரம்பட்டு
தெருவிளக்கு வெளிச்சத்தில் விடியலைத் தேடும் குழந்தைகள்

அடிப்படை வசதிகள் பரவலாக்கப்பட்டு, தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும் கூட, விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே ஆகாசம்பட்டு ஊராட்சி அச்சிரம்பட்டு கிராமத்தில் தெரு மின் விளக்கு ஒளியில் ஆதி பழங்குடியின குழந்தைகள் பாடப் புத்தங்களை படிக்கும் அவலம் தொடர்கிறது.

"பூம் பூம் மாட்டுக்காரர்கள்' என அழைக்கப்படும் ஆதிபழங்குடியினத்தைச் சேர்ந்த 22 குடும்பங்கள் அடங்கிய 100-க்கும் மேற்பட்டோர் இந்தக் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். குலத் தொழில் காரணமாக, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து புலம் பெயர்ந்து இங்குள்ள ஓடை புறம்போக்கு நிலத்தில் கொட்டகைகள் அமைத்து வசிக்கின்றனர்.

பசு மாட்டை அலங்கரித்து, அதை கிராமங்களுக்கு அழைத்துச் சென்று, வாத்தியங்களுடன் ஆட வைத்து, அப்போது மக்கள் அளிக்கும் சொற்பக் காசுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்தத் தொழிலும் வருவாய் இல்லாமல் போகவே, இவர்களில் பலர் கூலித் தொழில்களை நாடி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக வசித்து வரும் இவர்களுக்கு நிரந்தரமாக குடும்ப அட்டை, வீட்டுமனை, குடியிருப்பு வசதி, தெருமின்விளக்கு, மின்சார வசதி போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. எனினும், அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து அடிப்படை வசதிகளுக்காகப் போராடி வருகின்றனர்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள், அருகே திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இவர்களுக்கான வசிப்பிடத்தில் மின்சார வசதி இல்லாததால், இவர்கள் இரவு நேரங்களில் படிப்பதற்கு வழியின்றி தவிக்கின்றனர். எனவே, அருகிலுள்ள துணை மின் நிலைய வாயில் பகுதியில் உள்ள ஒற்றைத் தெருவிளக்கு மின் கம்பத்தின் கீழ் அமர்ந்து, சொற்ப வெளிச்சத்தில் வீட்டுப் பாடங்களை படித்து வருகின்றனர்.

இதுகுறித்து அங்கு வசித்து வரும் ஆதிபழங்குடியின சங்கத் தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
 வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றைப் பெற்று 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் நாங்கள் நிலையான குடியிருப்பு இன்மையால், குடும்ப அட்டை, முகவரியின்றி தவிக்கிறோம். இதனால், அரசின் சலுகைகள், திட்டங்களைக் கூட பெற முடியவில்லை. இங்கு மின் வசதி இல்லாததால் மண்ணெண்ணெய் விளக்கை பயன்படுத்துகிறோம். தொண்டு நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு சூரிய ஒளி மின் விளக்கு கூட பயன்பாட்டில் இல்லை.

அடிப்படை வசதிகளைக் கோரி மாவட்ட ஆட்சியர், அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கையில்லை.

கோரிக்கையை பரிசீலிப்பதாகக் கூறும் அரசியல் கட்சியினரோ, ஓட்டுக்களைப் பெறுவதற்கு மட்டுமே எங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நாட்டு குடிமக்களாக இருந்தும், அடிப்படை வசதிகளின்றி அவதிப்படுவது மிகுந்த வேதனையைத் தருகிறது என்றார் அவர்.

இதுகுறித்து, வானூர் வட்டாட்சியர் பிரபாகரனிடம் கேட்டபோது, அவர்களுக்கு புதிய இடம் தேர்வு செய்து, முறையாக பட்டா வழங்க ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். ஆதார் எண், வாக்காளர் அட்டை கொண்டே குடும்ப அட்டையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களின் குறைகள் தீரும் என்றார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com