படிவம் பி-யில் அதிமுக பொதுச் செயலாளர் கையெழுத்து இல்லை: மதுசூதனன் மனுவை நிராகரிக்க டிடிவி தரப்பு கோரிக்கை! 

ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுகவின் மதுசூதனனின் வேட்பு மனுவில் படிவம் பி-யில் அதிமுக பொதுச் செயலாளர்  கையெழுத்து இல்லாததால் அம்மனுவை நிராகரிக்க வேண்டும் என டிடிவி தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. 
படிவம் பி-யில் அதிமுக பொதுச் செயலாளர் கையெழுத்து இல்லை: மதுசூதனன் மனுவை நிராகரிக்க டிடிவி தரப்பு கோரிக்கை! 

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுகவின் மதுசூதனனின் வேட்பு மனுவில் படிவம் பி-யில் அதிமுக பொதுச் செயலாளர்  கையெழுத்து இல்லாததால் அம்மனுவை நிராகரிக்க வேண்டும் என டிடிவி தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. 

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி டி.டி.வி. தினகரன் அணி, ., நடிகர் விஷால் மற்றும் ஜெ.தீபா ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனுக்களின் பரிசீலனை செவ்வாயன்று தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரியால் நடந்தது. அப்பொழுது திமுக, அதிமுக , பாஜக உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்களின் மனு ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. அதே சமயம் நடிகர் விஷால், ஜெ.தீபா உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

வியாழன் அன்று மதியம் மூன்று மணியோடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான நேரம் நிறைவு பெற்றதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் மாலை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி 58 வேட்பாளர்கள் ஆர்.கே.நகரில் போட்டியிடுகின்றனர். ஏற்கப்பட்ட 72 மனுக்களில் 14 மனுக்கள் வியாழன் அன்று திரும்பப் பெறப்பட்டுள்ளன. அவர்களில் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்த 4 பேரும் அடங்குவார்கள்.

இந்நிலையில் மாலை 5 மணி அளவில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெறுவதாக இருந்தது. அப்பொழுது திடீரென்று அதிமுகவின் மதுசூதனனின் வேட்பு மனுவில் படிவம் பி-யில் அதிமுக பொதுச் செயலாளர்  கையெழுத்து இல்லாததால் அம்மனுவை நிராகரிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பு ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

முன்னதாக அதிமுகவின் மதுசூதனனின் வேட்பு மனுவில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணைத் தலைவரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கூட்டாக கையெழுத்திட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவின் சின்னம் மற்றும் கொடியினைப் பயன்படுத்துவது தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் கொடுத்திருந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் அவர்கள் இருவரும் மனுவில் கையெழுத்திட்டதாகவும், வேட்பு மனுவினை ஏற்றுக் கொண்டதன் மூலம் தேர்தல் ஆணையமும் அதனை அங்கீகரித்துள்ளதாக அதிமுக தரப்பு கூறி வருகிறது.

ஆனால் அதிமுகவின் அடிப்படை சட்ட திட்டங்களின் படி ஒருங்கிணைப்பு குழு பதவிகள் தொடர்பாக விதிமுறைகள் இல்லை என்ற விஷயத்தை தற்பொழுது தினகரன் தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com