மகள் பாலியல் பலாத்காரம்: தந்தைக்கு 43 ஆண்டுகள் சிறை

திருச்சி அருகே பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 43 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
மகள் பாலியல் பலாத்காரம்: தந்தைக்கு 43 ஆண்டுகள் சிறை

திருச்சி அருகே பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 43 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், அரசங்குடி அருகிலுள்ள மேலவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ச. காமராஜ் (48). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகன், ஒரு மகளுக்கு திருமணமாகிவிட்டது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தாய் பழனியம்மாள் வேலைக்குச் சென்றபோது, இவர்களின் 14 வயது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு அவரது தந்தை காமராஜ் , மகளை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டிபலமுறை அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து கணவர் காமராஜை தட்டி கேட்ட மனைவி பழனியம்மாளையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டதால் கர்ப்பமடைந்த சிறுமிக்கு திண்டுக்கல் கஸ்தூரிபா மருத்துவமனையில் 2015, மார்ச் மாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை தத்து கொடுக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் அக்குழந்தையும் சில மாதங்களில் உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து டி.என்.ஏ. பரிசோதனைக்காக புதைக்கப்பட்ட குழந்தையின் தொடை எலும்பு, பாதிக்கப்பட்ட சிறுமி, காமராஜ் ஆகியோரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டதில், சோதனையில் காமராஜ்தான் குழந்தையின் தந்தை என உறுதியானது. இந்த சம்பவம் தொடர்பாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் போலீஸார் வழக்குப்பதிந்து காமராஜை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காமராஜுக்கு 3 ஆயுள் தண்டனையும் (தலா 14 ஆண்டுகள்), கொலை முயற்சி வழக்கில் ஓராண்டுசிறைத் தண்டனை என மொத்தமாக 43 ஆண்டுகள் தண்டனையும், ஒவ்வொரு ஆயுள் தண்டனைக்கும் தலா ரூ.1000 வீதமும், கொலை முயற்சி வழக்குக்கு ரூ.500 -மும் அபராதம் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் புதன்கிழமை தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காமராஜின் செயல் பாலியல் வன்கொடுமையிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் சட்டத்தின் (2012) கீழ் வரும் 3 பிரிவுகளில் உறுதி செய்யப்பட்டு, தலா 14 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், காமராஜ் ஏககாலமாக தண்டனை அனுபவிக்க முடியாது. எனவே, நீதிபதி அளித்த தீர்ப்பின்படி 43 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தாக வேண்டும் என அரசு வழக்குரைஞர் தெரிவித்தார்.நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, காமராஜ் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com