மீனவர்கள் தமிழகம் திரும்ப அரசு உதவி: முதல்வர் நடவடிக்கை

ஒக்கி புயலால் அண்டை மாநிலங்களில் கரை ஒதுங்கிய மீனவர்கள், தமிழகம் திரும்பத் தேவையான டீசல் மற்றும் உதவித் தொகையை வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
'ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணிகள் குறித்து, கடற்படை, விமானப்படை, இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்ட முதல்வர்
'ஒக்கி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணிகள் குறித்து, கடற்படை, விமானப்படை, இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்ட முதல்வர்

ஒக்கி புயலால் அண்டை மாநிலங்களில் கரை ஒதுங்கிய மீனவர்கள், தமிழகம் திரும்பத் தேவையான டீசல் மற்றும் உதவித் தொகையை வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மீனவர்களை பத்திரமாக மீட்டு சொந்த ஊர்களுக்கு அழைத்து வர மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளையும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்ப அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஒக்கி புயல் பாதிப்பால் அண்டை மாநிலங்களில் கரை ஒதுங்கியுள்ள மீனவர்களை தமிழகம் அழைத்து வருவது தொடர்பாக கடற்படை, விமானப்படை மற்றும் இந்திய கடலோரக் காவல் படை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை ஆலோசனை நடத்தியபின் வெளியிட்ட அறிவிப்பு:-
ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற மீனவர்களில் சிலர் இன்னமும் கரை திரும்பவில்லை என மாவட்ட நிர்வாகம் செய்து வரும் கணக்கெடுப்பின் போது மீனவர்களின் உறவினர்கள் வழியாகத் தெரிய வந்துள்ளது. இந்த மீனவர்கள் கர்நாடக மாநிலத்தின் மங்களூருக்கு அருகிலுள்ள மாரிகோ தீவிலும், குஜராத், லட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையேவுள்ள ஆழ்கடல் பகுதியிலும் இருக்கலாம் என மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்பதற்கான தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணியை கடலோரக் காவல் படை, இந்திய விமானப் படை, இந்திய கடற்படையும் கூட்டாக இணைந்து அரபிக்கடல் பகுதியில், அனைத்து மீனவர்களும் மீட்கப்படும் வரையில் தீவிர மற்றும் தொடர் தேடுதல் மேற்கொள்ள வேண்டுமென முதல்வர் பழனிசாமி வலியுறுத்தினார்.
காணாமல் போன மீனவர்கள் இப்போது இருக்கக் கூடும் எனக் கருதப்படும் இடங்களின் அட்ச, தீர்க்க ரேகை விவரங்கள் சென்னையில் உள்ள கடலோர தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது. அவற்றின் நகல் உடனடியாக கடற்படை, விமானப் படை, இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது.
டீசல், உதவித் தொகை: காணாமல் போன கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்களைக் கண்டுபிடித்து மீட்பதற்கு தூத்துக்குடியில் அமைந்துள்ள கடலோரக் காவல் படையினர், கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதி முழுவதும், வான்வழி மற்றும் கடல் வழியாக தீவிர, தொடர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.
அண்டை மாநிலங்களில் கரை சேர்ந்துள்ள மீனவர்கள் பத்திரமாக தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப ஏதுவாக விசைப்படகு ஒன்றுக்கு 750 லிட்டர் டீசலும், நாட்டுப்படகுக்கு 200 லிட்டர் டீசலும், உணவுப் பொருள்கள் வாங்குவதற்காக படகிலுள்ள மீனவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும் சிறப்பு நிகழ்வாக வழங்கப்படும்.
மீனவர்களை அவர்களது படகுகளுடன் அவரவர் சொந்த ஊர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசு உதவியுடன் கொண்டு வந்து சேர்க்கும் பணியை மேற்கொள்ளப்படும். 
மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்: இதற்காக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஒவ்வொருவரும் மீனவர்கள் கரை ஒதுங்கிய மாவட்டங்களுக்குச் செல்ல உள்ளனர்.
அதன்படி, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தோஷ்பாபு, கர்நாடக மாநிலத்துக்கும், மகாராஷ்டிர மாநிலத்துக்கு ஷம்பு கல்லோலிகர், குஜராத் மாநிலத்துக்கு சந்திரகாந்த் பி.காம்ளே, கேரள மாநிலத்துக்கு அருண் ராய், லட்சத்தீவு யூனியன் பிரதேசத்துக்கு ஜான் லூயிஸ் ஆகியோர் அனுப்பி வைக்கப்படுவர்என்றார் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.
தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
குமரியில் பிரத்யேக கடலோரக் காவல் படை நிலையம்
கன்னியாகுமரியில் பிரத்யேகமாக கடலோரக் காவல் படை நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்பது தொடர்பாக, முப்படை அதிகாரிகளுடன் அவர் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு அவர் வெளியிட்ட அறிவிப்பு:
புயல் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் ஒருங்கிணைந்த தேடுதல், மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு உகந்த வகையில், சென்னையில் உள்ள கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையமானது, போதுமான பணியாளர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
புயல் போன்ற அசாதாரண காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்திய கடலோரக் காவல் படை மற்றும் இந்திய கடற்படையினரால் தமிழக கடற்கரை பகுதியில் வான்வழி கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்பச் செய்ய வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் நீண்ட நாளைய கோரிக்கையான பிரத்யேக கடலோரக் காவல் படை நிலையம் ஏற்படுத்தப்படும். அதில், ஹெலிகாப்டர்கள் இறங்குதள வசதிகளும் இருக்கும் வகையில் உருவாக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com