விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்: திமுக, காங்கிரஸ் அலுவலகங்கள் இடிப்பு

விழுப்புரத்தில் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட திமுக, காங்கிரஸ் அலுவலகங்கள், 20 கடைகள் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்: திமுக, காங்கிரஸ் அலுவலகங்கள் இடிப்பு

விழுப்புரத்தில் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட திமுக, காங்கிரஸ் அலுவலகங்கள், 20 கடைகள் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டன. இதற்கு கட்சியினர், கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் செல்லும் கோலியனூரான் வாய்க்கால் ஆக்கிரமிப்பால் குறுகிக் காணப்படுகிறது. முன்பு பாசன வாய்க்காலாக இருந்து, தற்போது நகரின் கழிவுநீரை கடத்தும் இந்த வாய்க்காலில், நகராட்சிப் பூங்கா எதிரே ஊரல் குட்டை பகுதி முதல் நேருஜி சாலை இடையே ஆக்கிரமித்து கடைகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில், திமுக, காங்கிரஸ் அலுவலகங்களும் அடங்கும். இந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன்பு ரயில்வே பாலம் அருகே அடைபட்டிருந்த இந்த வாய்க்காலை சீரமைத்தபோது, எஞ்சியுள்ளஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்தார். ஊரல்குட்டை, நேருஜி சாலைப் பகுதியில் வாய்க்காலை ஆக்கிரமித்தவர்களுக்கு நகராட்சி தரப்பில், காலி செய்திட அவகாசம் வழங்கி நோட்டீஸ் வழங்கப்பட்டது.
 21 நாள்கள் ஆன நிலையிலும் ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள அவர்கள் முன் வராததால், டிச.6-இல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்தது.
 இதன்படி, புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நகராட்சி, வருவாய்த் துறையினர் மேற்கொண்டனர். நகராட்சி ஆணையர் செந்திவேல், பொறியாளர் சுரேந்தர், நகரமைப்பு அலுவலர் ஜெயவேல், வட்டாட்சியர் சுந்தரராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன், இப்பணி தொடங்கியது.
 எதிர்ப்பு தெரிவித்து மறியல்: பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நேருஜி சாலையில் திமுக நகர அலுவலகம் தொடங்கி ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றினர். அப்போது வந்த திமுக நகர அவைத் தலைவர் சக்கரை உள்ளிட்ட கட்சியினரும், கடை உரிமையாளர்களும் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு இயங்கிய நகர காங்கிரஸ் அலுவலகமும் இடிக்கப்பட்டது. இதற்கு முன்னாள் மாவட்டத் தலைவர் குலாம் மொய்தீன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
 அப்போது அதிகாரிகள், ஆக்கிரமித்திருந்த வாய்க்கால் புறம்போக்கு இடங்கள் உரிய அவகாசம் வழங்கப்பட்ட பிறகே இடிக்கப்படுகிறது. நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற எந்தத் தடை உத்தரவும் எங்களுக்கு வரவில்லை. எனவே, பணியைத் தொடர ஒத்துழைக்குமாறு தெரிவித்து, ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றும் பணியை மாலை 6 மணி வரை தொடர்ந்தனர்.
 இதில், நேருஜி சாலையில் இருந்த திமுக நகர அலுவலகம், காங்கிரஸ் நகர அலுவலகம், இரண்டு அடுக்கு மாடி கட்டடங்களில் இருந்த 20 கடைகள் வரை முற்றிலும் இடித்து அகற்றப்பட்டன.
 ஆக்கிரமிப்பு அகற்றும் பணியால் விழுப்புரம்-புதுவை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து மாற்றுச் சாலையில் வாகனங்களை போலீஸார் திருப்பி விட்டனர். 30 ஆண்டு கால ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டிருப்பது பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com