15 ஆண்டுகளுக்குப்பின் போடி கோயில் தங்கக்கவசம் மீட்பு

தேனி மாவட்டம் போடியில் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த கோயில் தங்கக் கவசத்தை 15 ஆண்டுகளுக்குப் பின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனர். 
போடியில் வியாழக்கிழமை வங்கியிலிருந்து எடுத்துவரப்பட்ட சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தங்கக்கவசம்.
போடியில் வியாழக்கிழமை வங்கியிலிருந்து எடுத்துவரப்பட்ட சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தங்கக்கவசம்.

தேனி மாவட்டம் போடியில் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த கோயில் தங்கக் கவசத்தை 15 ஆண்டுகளுக்குப் பின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மீட்டனர். 
போடியில் பழமையான சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. நூறாண்டுகளுக்கு முன் ஜமீன்தார்களால் கட்டப்பட்ட இக்கோயில் தற்போது இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இக்கோயிலுக்கு கடந்த 1970 ஆம் ஆண்டு பக்தர்கள் நன்கொடையாக அளித்த தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொண்டு 1970 கிராம் எடையிலான தங்கக் கவசம் செய்யப்பட்டது. இந்த கவசம் சுவாமிக்கு முக்கிய விழாக்களின்போது அணிவிக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. அப்போதைய கோயில் பரம்பரை அறங்காவலராக இருந்த போடி ஜமீன்தாரிணி முத்து வீர சுருளியம்மாள் பெயரில் போடியில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் கவசம் வைக்கப்பட்டிருந்தது. சுமார் 15 வருடங்களுக்கு முன் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது தங்கக் கவசம் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில், அதன் பின் தங்க கவசம் அணிவிக்கப்படாமலேயே இருந்து வந்தது.
இந்த நிலையில், போடியைச் சேர்ந்த முருக பக்தர்களின் குருசாமியான சுருளிவேல் என்பவர் தங்கக்கவசம் குறித்து கோயில் நிர்வாகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதில், தங்கக்கவசம் கோயிலில் ஒப்படைக்கப்படவில்லை என பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. 
இதனையடுத்து மேற்படி தங்கக்கவசத்தை மீட்டு கோயில் தக்காரிடம் ஒப்படைக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகளுக்கு சுருளிவேல் கோரிக்கை மனு அனுப்பினார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்ததில் முத்துவீர சுருளியம்மாள் பெயரில் பாதுகாப்பு பெட்டகத்தில் தங்கக்கவசம் வைக்கப்பட்டிருந்ததும், அதற்கான சாவி காணாமல் போனதும் தெரியவந்தது. இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வங்கி நிர்வாகத்துடன் பேசி, பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி வியாழக்கிழமை, இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் பச்சையப்பன், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், தேனி மாவட்ட கோயில்கள் ஆய்வாளர் அய்யம்பெருமாள், போடி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தக்கார் கிருஷ்ணவேணி, கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன், ஜமீன்தாரிணி முத்துவீர சுருளியம்மாள் ஆகியோர் முன்னிலையில், போடியில் உள்ள வங்கி பாதுகாப்பு பெட்டகம், பாதுகாப்பு பெட்டக தயாரிப்பு நிறுவன தொழில்நுட்ப ஊழியர்களால் திறக்கப்பட்டது.
அதில் தங்கக் கவசம் இருந்தது. அதனை கோயில் அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வந்த அதிகாரிகள், அதனை தங்க நகை மதிப்பீட்டாளர்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர். 
பின்னர் இதுகுறித்து புகார் அளித்த, சுருளிவேல் தரப்பினருக்கு காண்பித்தபின் மீண்டும் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்தனர். 
தங்க கவசம் 1970 கிராம் எடை கொண்டதாக இருந்தது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.53 லட்சம். கிரீடம், உடல், கை, கால் மற்றும் தங்க வேல் என 11 பிரிவுகளாக தங்கக்கவசம் அமைந்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com