கடலூர் மாவட்டத்திலிருந்து மாயமான 19 மீனவர்களின் நிலை என்ன?

கடலூர் மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான 19 மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாததால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலிருந்து மாயமான 19 மீனவர்களின் நிலை என்ன?

கடலூர் மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று மாயமான 19 மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாததால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடலூர் மாவட்ட மீனவர்கள் கன்னியாகுமரி, கேரள மாநிலத்துக்கு மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். அதன்படி கடந்த மாதம் கடைசி வாரத்தில் மாவட்டத்திலிருந்து சுமார் 100 பேர் மீன்பிடி பணிக்காகச் சென்றிருந்தனர். இவர்கள் கடலுக்குள் சென்றிருந்த நிலையில், கன்னியாகுமரி கடல் பகுதியை கடந்த 30}ஆம் தேதி ஒக்கி புயல் தாக்கியது. இதில் மீனவர்கள் பலர் மாயமாகினர். சில படகுகள் கவிழ்ந்து மீனவர்கள் இறந்த சம்பவமும் நடந்துள்ளது.
கன்னியாகுமரியை ஒக்கி புயல் தாக்கியதை அறிந்த கடலூர் மாவட்ட மீனவக் குடும்பத்தினர் தங்களது குடும்பத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் குறித்த விவரம் தெரியாமல் கலக்கமடைந்தனர். பின்னர், மீன்வளத் துறையினரைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர். அவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த மற்ற குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் லட்சத் தீவிலுள்ள கடம்பத் தீவில் 3}ஆம் தேதி இரவில் கரை ஒதுங்கி மீட்கப்பட்டனர்.
அதேபோல, கர்நாடக மாநிலம், மலப்பையில் கரையேறிய கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்கள் சக்திவேல், முத்து, செல்வம், பரங்கிப்பேட்டை மீனவர்கள் இளவரசன், கஜேந்திரன், ஆறுமுகம், சேஷாத்திரி ஆகியோர் வியாழக்கிழமை வீடு திரும்பினர்.
இதுகுறித்து மீனவர் சக்திவேல் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவரின் படகில் 12 பேருடன் 420 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். நவம்பர் 30}ஆம் தேதி மற்ற மீனவர்கள் மூலமாக எங்களுக்கு புயல் எச்சரிக்கை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மிகுந்த சிரமத்துடன் படகை செலுத்தியதில், படகு கர்நாடக மாநிலம், மலப்பையில் கரை ஒதுங்கியது. அங்கிருந்தவர்கள் எங்களை மீட்டனர் என்றார் அவர்.
கடலூர் தேவனாம்பட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஐ.அன்பு, அவரது சகோதரர் ஐ.தினேஷ், ச.இளமாறன், கே.ராஜு, பி.சுமன், ஐ.ராஜீவ் காந்தி, பி.இளவரசன், சுரேஷ், ராஜாராமன், எஸ்.ஜான்சன் ஆகிய 10 பேர் குறித்து இதுவரை எந்த விவரமும் கிடைக்கவில்லை என அவர்களது குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்ற படகுகளில் சென்றவர்கள் மூலமாக தகவல் திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒக்கி புயலுக்குப் பின்னர் இதுவரை 10 பேரும் குடும்பத்தாருடன் தொடர்புகொள்ளாததால் அவர்களது நிலை என்னவானது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் பெரு.ஏகாம்பரம் கூறியதாவது:
கடலூர் மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றவர்களில் தேவனாம்பட்டினம் மீனவர்கள் உள்பட 19 பேர் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து குடும்பத்தாருக்கு பதிலளிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com